BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

கோயில்களில் மோடி உரை ஒளிபரப்பில் விதிமீறல் இல்லை – உயர் நீதிமன்றம்

ஆதிசங்கரர் சிலை திறப்பு விழா நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடியின் உரையை தமிழ்நாட்டின் கோயில்களில் ஒளிபரப்பியதில் விதிமீறல் இல்லை எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது, அது தொடர்பான ரங்கராஜன் நரசிம்மன் மனுவைத் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை: ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அவர் தாக்கல்செய்த மனுவில்,

நரேந்திர மோடி கேதர்நாத் கோயிலில் நடத்திய ஆதிசங்கரர் பூஜை, தமிழ்நாட்டில் உள்ள 16 கோயில்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதாகவும், அதற்காகக் கோயில் நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் கூறி, மரபு மற்றும் மதம் சாராத நிகழ்வுகளுக்குக் கோயிலில் அனுமதியளிக்கக் கூடாது எனவும், கோயில் வளாகங்களில் வாகனங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும் எனவும், கோயில்களில் தின்பண்டங்கள் விற்கத் தடைவிதிக்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளார்.

அறநிலையத் துறை ஊழியர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்த நாள்கள், கூட்டங்கள் நடத்தப்படுவதாகவும் மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள்,

இந்து சமய அறநிலைய சட்ட விதிகளை மீறி உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆதிசங்கரர் சிலையைத் திறந்துவைத்து உரையாற்றிய நிகழ்ச்சி தமிழ்நாட்டில் 16 கோயில்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதாக மனுதாரர் குற்றஞ்சாட்டினார். இதற்காகக் கோயில் நிதி பயன்படுத்தப்பட்டதாகவும், அதேபோல தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் தொல்லியல் துறை கண்காட்சி நடத்தியதாகவும் குறிப்பிட்டார்.

அரசியல் அல்ல ஆன்மிகம் சார்ந்த நிகழ்ச்சி!

தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் கண்காட்சி நடத்துவது தவறு அல்ல என்றும், இந்திய அரசு உத்தரவின்படி பிரதமர் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டதாகவும், அது அரசியல் அல்ல. மதம் சார்ந்த ஆன்மிக நிகழ்ச்சிதான். அறநிலையத் துறை எந்த விதிகளையும் மீறவில்லை என விளக்கமளித்தார்.

தமிழ்நாடு கோயில்களில் அரசியல் நிகழ்ச்சிகளை அனுமதிப்பதில்லை என்ற அரசுத் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதிகள், புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட கோயில்களில், தொல்லியல் துறை கண்காட்சி நடத்தியதை அரசியல் நிகழ்ச்சியாகக் கருத முடியாது என உத்தரவிட்டனர்.

பிரதமரின் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, அவரது பேச்சு முழுவதும் ஆதி சங்கரர் பற்றித்தான் இருந்துள்ளது எனக் கூறிய நீதிபதிகள், பிரதமரின் பேச்சின் சாராம்சத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

வழக்கு ஒத்திவைப்பு

இதேபோல ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை போன்ற கோயில் வளாகங்களில் உள்ளேயே இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் இயக்க அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவித்த நீதிபதிகள், உரிய ஆதாரங்களையும், புகைப்படங்களையும் தாக்கல்செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )