BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பு தமிழகத்தில் 61% வாக்குப்பதிவு

 

நீண்ட வரிசையில் நின்று மக்கள் வாக்களித்தனர் * அசம்பாவித சம்பவங்கள் இல்லாமல் அமைதியாக நடந்தது

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று அமைதியான முறையில் நடந்தது. தமிழகம் முழுவதும் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மாநிலம் முழுவதும் அதிக அளவில் வாக்குகள் பதிவானாலும், சென்னையில் மந்தமான வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,820 வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கு நேற்று (19ம் தேதி) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஒரு இடத்துக்கு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. 12,870 வார்டு கவுன்சிலர் பதவிக்கு இறுதியாக 57,746 பேர் போட்டியிட்டனர். மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தபடி நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

தமிழகத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது, அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் மின்னணு எந்திரம் மூலமே வாக்குப்பதிவு நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலில் 55,337 கட்டுப்பாட்டு எந்திரமும், 1 லட்சத்து 6 ஆயிரத்து 121 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டது. ஒரு வார்டில் 16 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால் 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. தேர்தல் பணியில் 1.32 லட்சம் ஆசிரியர்கள்மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு வாக்குச்சாவடி மையங்களில் 4 அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 648 பேர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 1,642 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர்.நேற்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னதாக, ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி நேற்று காலை 6 மணிக்கு அனைத்து வேட்பாளர்களின் தேர்தல் ஏஜென்டுகள் முன்னிலையில், வாக்குச்சாவடி அலுவலர்கள் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி காட்டினர். ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களிலும் 50 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு, மின்னணு எந்திரம் சரியாக வேலை செய்கிறதா என்று பரிசோதனை நடத்தி காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து 7 மணிக்கு பொதுமக்கள் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டனர்.

நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டாலும், பொதுமக்கள் காலை 6 மணியில் இருந்தே வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்துவிட்டு சென்றனர். பலரும் குடும்பத்தினருடன் மொத்தமாக வரிசையில் நின்று வாக்களித்தனர். தேர்தல் வாக்குச்சாவடிக்கு நடந்து வர முடியாத பெரியவர்களை, இளைஞர்கள் தூக்கிக் கொண்டு வந்து வாக்களிக்க செய்தனர். அதேபோன்று, அரசியல் கட்சி தலைவர்களும் காலையிலேயே வாக்களிக்க ஆர்வம் காட்டினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை 9.30 மணிக்கு சென்னை, தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். அதேபோன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வாக்களித்தார். காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணி செயலாளர் அன்புமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்களும், நடிகர், நடிகைகளும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் காலையிலேயே வாக்களித்தனர்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்கவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கும் வகையில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், ஊர்காவல் படை வீரர்களும் அடங்குவார்கள். மொத்தமுள்ள 30,745 வாக்குச்சாவடி மையங்களில் 25,735 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. 5 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. தமிழகத்தில் 5,920 பதட்டமான வாக்குப்பதிவு மையங்கள் கண்டறியப்பட்டது.நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை இடைவிடாமல் வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கோவிட் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். அதற்கு முன்னேற்பாடாக, தேர்தல் பணியாளர்களும் மாலை 5 மணியில் இருந்து 6 மணி வரை பிபி கிட் உடை அணிந்து பணியில் ஈடுபட்டனர். மாலை 5 மணிக்கு முன்பே வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். வாக்களிக்க வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு, வாக்குச்சாவடி மையங்களிலேயே முகக்கவசம் வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் நேற்று மாலை 6 மணி வரை சென்னை தவிர அனைத்து மாவட்டங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. சென்னையில் மட்டும் காலை முதல் மாலை வரை மிகவும் மந்தமான வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதி நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தம் 60.70% வாக்குகள் பதிவாகியுள்ளது. பேரூராட்சியில் 74.68 சதவீதம், நகராட்சியில் 68.22 சதவீதம், மாநகராட்சியில் 52.22 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் அதிககட்சமாக 80.49 சத வீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 43.59 சதவீதம் வாக்குகளே பதிவாகி உள்ளன என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்தார்.மேலும் அவர் கூறும்போது, ‘‘தமிழகம் முழுவதும் நடைபெறும் வாக்குப்பதிவு காட்சிகளை சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து இணையதளம் மூலம் நேரடியாக கண்காணிக்கப்பட்டது. இதற்காக 30 பேர் இந்த பணியில் ஈடுபட்டனர்.

இந்த தேர்தலில் சுமார் 2.83 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். நேற்று காலை தொடங்கி மாலை வாக்குப்பதிவு முடியும் வரை தமிழகத்தில் எந்த வாக்குச்சாவடி மையங்களிலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இல்லாமல் மிகவும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது, ஒரு சில இடங்களில் அதாவது 30 முதல் 40 மையங்களில் மட்டும் வாக்குப்பதிவு எந்திரங்களில் சிறிய அளவிலான கோளாறு ஏற்பட்டது. அது உடனடியாக சரி செய்யப்பட்டு அல்லது மாற்றப்பட்டு அந்த மையங்களில் மீண்டும் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது” என்றார்.

உடை விஷயத்தில் கட்டுப்பாடு இல்லை
மதுரையில் ஒரு வாக்குச்சாவடியில் ஹிஜாப் உடையுடன் இஸ்லாமிய பெண் ஒருவர் வாக்களிக்க வந்தார். அப்போது அங்கிருந்த பாரதிய ஜனதா பூத் ஏஜென்டு ஹிஜாப் உடையுடன் வந்து வாக்களிக்க எதிர்ர்பு தெரிவித்தார். இதற்கு மற்ற கட்சி ஏஜென்டுகள் கண்டித்தனர். பின்னர் பாஜ பூத் ஏஜென்ட் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த விவகாரம் குறித்து நேற்று சென்னையில், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமாரிடம் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘இது சுதந்திரமான நாடு. உடை விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு எதுவும் போடவில்லை. அங்கு நடந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை தரும்படி மதுரை கலெக்டரிடம் கேட்கப்பட்டுள்ளது” என்றார்.

22ம் தேதி வாக்கு எண்ணிக்கை
வாக்குப்பதிவு நேற்று மாலை 6 மணிக்கு முடிந்ததும், மின்னணு இயந்திரத்துக்கு வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று இரவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டது. இந்த அறையின் உட்புறம் மற்றும் வெளிப்புறம், வாக்கு எண்ணும் கூடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் 3 அடுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 268 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில், வருகிற 22ம் தேதி (செவ்வாய்) காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும். முன்னணி நிலவரம் காலை 9 மணி முதல் தெரியவரும்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )