தலைப்பு செய்திகள்
மக்கள் சேவகருக்கு மாபெரும் பரிசு.
அறக்கட்டளை நிர்வாகியான தனது மாமனாரின் பிறந்தநாளை முன்னிட்டு, தாய்ப்பாலை தானமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி முன்னுதாரணமாக திகழும் தாய்.
பிறருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுவது மகிழ்ச்சியின் வெளிப்பாடு. குழந்தைகளுக்கு விளையாட்டு பொம்மைகளை பரிசாக வழங்கலாம். அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவைப்பணியில் ஈடுபட்டுள்ள அறக்கட்டளை நிர்வாகி ஒருவருக்கு, அந்த அறக்கட்டளையில் தன்னை இணைத்துக்கொண்டு சேவையாற்றி வருபவரும், அறக்கட்டளை நிர்வாகியின் மருமகளுமான பெண் ஒருவர் தாய்ப்பாலை தானமாக வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அல்லது பிரசவத்தின்போது ஏற்படும் மன உளைச்சலின் காரணமாக தாய்க்கு பால் சுரக்காமல் போவது, பிரசவத்தின் போது தாய் உயிரிழந்து விடுவது ஆகிய காரணங்களால் குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்காமல் போகக்கூடும். இத்தகைய குழந்தைகளுக்கு புட்டிப்பால் வழங்கினால் அக்குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படும் அபாயம் ஏற்படும். குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தாய்ப்பாலின் அத்தியாவசியத்தை உணர்ந்த மயிலாடுதுறை ஏடிஎஸ் அறக்கட்டளையின் அறங்காவலர் 4 மாத குழந்தைக்கு தாயான வினிதா சுதாகர் என்பவர், தனது குழந்தைக்கு தாய்ப்பால் தேவைப்படுவது போன்றே, தாயை இழந்த அல்லது தாயால் பால் தரமுடியாத குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள தாய்ப்பாலின் அவசியத்தைப் புரிந்து, அண்மையில் நடைபெற்ற தனது மாமனாரும், மயிலாடுதுறை ஏடிஎஸ் அறக்கட்டளையின் நிறுவனருமான ஏ.தமிழ்ச்செல்வனின் 67-வது பிறந்த நாளில் தாய்ப்பாலை தானமாக வழங்கி நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் “தாய்ப்பால் தானம்” விழிப்புணர்வுக்காக 2 லிட்டர் தாய்ப்பாலை, மாவட்ட மருத்துவ அலுவலர் இரா.மகேந்திரன், மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலர் இரா.ராஜசேகர், குழந்தைகள் நல மருத்துவர்கள் பாலாஜி, பரத்குமார் அவர்களது முன்னிலையில், தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் எஸ்..குருநாதனிடம் அறக்கட்டளை தலைவரின் கரங்களால் வழங்கச் செய்து, மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வாழும் மகத்தான மனிதருக்கு இதைவிட சிறந்த பரிசினை வழங்க முடியாது என்று அவர் நிரூபித்துள்ளார். நிகழ்ச்சியில், அறக்கட்டளை அறங்காவலர் வழக்குரைஞர் ஏடிஎஸ்.சுதாகர் கலந்து கொண்டார்.