தலைப்பு செய்திகள்
சிறுமியை கடத்திய வாலிபர் மீது போக்சோ சட்டம்.
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே 16 வயது சிறுமியைக் கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் மற்றும் அவரது தந்தை இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னி மலை ஊராட்சி ஒன்றியம் வெள்ளோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் தன்னுடைய 16 வயது மகளைக் கடந்த 6-ந்தேதி முதல் காணவில்லை எனவும், 10ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் தனியாக இருந்ததாகவும், கடந்த 7ந் தேதி வெள்ளோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இது குறித்து வெள்ளோடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன சிறுமியைத் தேடி வந்தனர். இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம், கொக்கராயன்பேட்டையை சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் முருகேசன் காணாமல் போன 16 வயது சிறுமியுடன் வெள்ளோடு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
அப்போது முருகேசன் சிறுமியைக் கடந்த 8 மாதங்களாகக் காதலித்து வந்ததாகவும், கடந்த 6-ந் தேதி சிறுமியை அழைத்துக் கொண்டு மேட்டூரில் உள்ள அவரது தந்தை ரத்தினத்திடம் சென்றிருக்கிறார். அவரது அறிவுரையின்படி, மறுநாள் 7-ந் தேதி எடப்பாடியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சிறுமியை அழைத்துச் சென்று, கிட்டாம்பட்டி என்னும் கிராமத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக முருகேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் முருகேசனிடமும், சிறுமியிடமும் காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தினர். இதில் சிறுமியை அவரது வீட்டுக்குத் தெரியாமல் கடத்தி சென்று திருமணம் செய்ததில் முருகேசனின் தந்தை ரத்தினத்துக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வெள்ளோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முருகேசன் மற்றும்
அவரது தந்தை ரத்தினத்தையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் 16 வயது சிறுமியைக் கடத்தி திருமணம் செய்த இந்த வழக்கில் தொடர்புடைய முருகேசனின் அண்ணன் பூபதியையும் போலீஸார் தேடி வருகின்றனர்.