BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60.70 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், வெற்றி வாய்ப்பு யாருக்கு என மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வந்த நிலையில், திமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டன. அப்போதே திமுக கூட்டணி முன்னிலை வகிக்கத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, வார்டு வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்படி சென்னை மாநகராட்சியில் 15 இடங்களில் வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.

அனைத்து மாநகராட்சிகளிலும் திமுக வெற்றி.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் திமுக 153, அதிமுக 15, திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 13, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 4, விடுதலை சிறுத்தைகள் கட்சி 4, மதிமுக 2, இந்திய கம்யூனிஸ்டு கட்சி 1, பாஜக 1, அமமுக 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 1 வார்டு என தங்கள் வெற்றிகளை பதிவு செய்தன. அத்துடன் சுயேச்சை வேட்பாளர்கள் 5 இடங்களில் வெற்றி பெற்றனர்.

கொங்கு மண்டலத்தில் திமுக வரலாற்று சாதனை

இந்நிலையில், அதிமுகவின் கோட்டையாக இருந்த கொங்கு மண்டலத்தையும் திமுக கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. அங்குள்ள பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 138 நகராட்சிகளில் திமுக 132 இடங்களையும், அதிமுக 3 இடங்களையும், மற்ற கட்சிகள் 3 இடங்களையும் கைப்பற்றின. அதேபோல், 489 பேரூராட்சிகளில் திமுக 435 இடங்களையும், அதிமுக 15 இடங்களையும், பாஜக 5 இடங்களையும், மற்ற கட்சிகள் 25 இடங்களையும் பிடித்தன.

அன்று ஜெயலலிதா இன்று மு.க.ஸ்டாலின்

2011-ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, அன்று இருந்த 10 மாநகராட்சிகள் அனைத்தையும் கைப்பற்றி சாதனை படைத்தது. அப்போது, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகியவை மாநகராட்சிகளாக இருந்தன. அதன் பின்னர், தமிழகத்தில் 11 மாநகராட்சிகள் கூடுதலாக உருவாக்கப்பட்டு தற்போது 21 மாநகராட்சிகள் இருக்கும் நிலையில், அனைத்து மாநகராட்சிகளையும், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.இந்நிலையில், வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் மார்ச் 2ஆம் தேதி பதவி ஏற்றுக்கவுள்ளனர். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் ஆகிய பதவி இடங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெற்றவர்கள் வாக்களிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )