தலைப்பு செய்திகள்
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 50 லட்சமாவது பயனாளிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகத்தை வழங்கினார்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.
இதன்கீழ் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களுக்கான மருந்துகள், அவர்களின் இல்லத்திற்கே சென்று வழங்கப்படுகிறது. இந்த நிலையில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 50 லட்சமாவது பயனாளி பாஞ்சாலிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகத்தை நேரில் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம் சித்தாலப்பாக்கத்தில் இருக்கும் பயனாளியின் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர், அவரிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார். மருத்துவர்களிடம் சிகிச்சை முறையையும் கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சில பயனாளிகளின் வீடுகளுக்கும் நேரடியாக சென்று, அவர்களுக்கு தேவையான மருந்து பெட்டகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். 188 அவசர கால ஊர்திகளின் சேவையையும், முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து “இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48” திட்ட பயனாளிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடினார். சாலை விபத்துகளில் சிக்குவோருக்கு அடுத்த 48 மணி நேரத்தில் இலவச சிகிச்சை அளிக்கும் இந்த திட்டம், கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் பயன்பெற்றவர்கள், முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், பலருக்கும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.