தலைப்பு செய்திகள்
தேனி அல்லிநகரம் நகராட்சி துணைத் தலைவர் பதவிக்கு ஏற்பட்டுள்ள ‘மல்லுக்கட்டு’ பிரச்னைக்கு சுமூக தீர்வு காண, தி.மு.க., கவுன்சிலர்கள் 19 பேரும் வெளியூருக்கு ‘எஸ்கேப்’ ஆன சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தேனி அல்லிநகரம் நகராட்சி துணைத் தலைவர் பதவிக்கு ஏற்பட்டுள்ள ‘மல்லுக்கட்டு’ பிரச்னைக்கு சுமூக தீர்வு காண, வெற்றி பெற்ற கையோடு, தி.மு.க., கவுன்சிலர்கள் 19 பேரும் வெளியூருக்கு ‘எஸ்கேப்’ ஆன சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில், தேனி மாவட்டத்தில் தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளுக்கான கவுன்சிலர் பதவிக்கு கூட்டணியுடன் போட்டியிட்ட தி.மு.க. தனித்துவமாக 19 இடங்களை கைப்பற்றியது.
இதனால் அவர்கள் கூட்டணி கட்சியின் வெற்றியை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. தலைவர் பதவி பெண்ணிற்கு ஒதுக்கப்பட்டதால், அந்த பதவிக்கு தி.மு.க.,- அ.தி.மு.க., வினரிடையே ‘மல்லுக்கட்டு’ ஏற்பட வாய்ப்பு இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் தி.மு.க., கவுன்சிலர்களின் ‘மெஜாரிட்டி’ யால் அதுவும் தவிடு பொடியானது. இதனால் தேர்தலுக்கு முன்பாகவே பேசி வைத்தது போல், தலைவர் பதவியை அலங்கரிக்கப்போவது தேனி நகர தி.மு.க., பொறுப்பாளர் பாலமுருகன் மனைவி 10 வது வார்டு உறுப்பினர் ரேணுப்பிரியா தான், என்பது தற்போது வெட்டவெளிச்சமாகி விட்டது.
துணைத் தலைவர் பதவிக்கு யாரை? தேர்ந்தெடுப்பது என்பதில்தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெற்றி பெற்ற கையோடு, தி.மு.க. கவுன்சிலர்கள் 19 பேரும் கடந்த 22ம் தேதி மாலை வேளையில் கையில் ‘டூர் பேக்’ குடன் திடீரென ‘எஸ்கேப்’ ஆன சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இப்படி அவர்கள் அவசர கதியாக செல்ல என்ன காரணம்? எங்கு சென்றார்கள்? என கட்சி வட்டாரத்தில் மெல்ல விசாரித்தபோது, ‘வெற்றிக் களிப்பை கொண்டாட மூணாறு, கொடைக்கால் போன்ற கோடை ஸ்தலங்களுக்கு சென்றிருக்கலாம். அங்கு சில நாட்கள் தங்கியிருந்து துணைத் தலைவர் பதவி யாருக்கு வழங்கலாம்? அதற்கு தகுதியான நபர் யார்? அவர் நமக்கு பக்க பலமாக இருப்பாரா? என்பது பற்றி கவுன்சிலர்கள் மத்தியில் கருத்து கேட்கப்படலாம். சுமூக தீர்வு ஏற்படும் பட்சத்தில் கவுன்சிலர்களுக்கு ‘கவனிப்பு’ பலமாக இருக்கும். இன்பச் சுற்றுலா சென்று வந்த திருப்தி, அவர்களுக்கு ஏற்படும்.
எது எப்படியோ…பணம் படைத்தவருக்கு மட்டுமே துணைத் தலைவர் ‘சீட்’ அலங்கரிக்க காத்திருக்கிறது. அது யார்? என்பதை சில நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.