BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் 2017-ம் ஆண்டு முதல் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வுகள் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

 

நீட் தேர்வு முறையால் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டதால் நீட் தேர்வு முறைக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது நீட் தேர்வுக்கு விலக்கு கோரி ஜனாதிபதியிடம் முறையிடப்பட்டது. ஆனால் ஜனாதிபதி ஒப்புதல் வழங்கவில்லை.

 

இதற்கிடையே நீட் தேர்வு பாதிப்பில் இருந்து பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை மீட்பதற்காக 7.5 சதவீத இட ஒதுக்கீடு முறையை தமிழக அரசு அறிவித்தது. என்றாலும் நீட் தேர்வு விலக்கை முழுமையாக பெறுவதற்காக தி.மு.க. ஆட்சி அமைந்ததும் சட்டசபையில் மசோதா கொண்டு வந்து ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அந்த மசோதா கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கடந்த 4 மாதங்களாக அந்த மசோதா மீது கவர்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமீபத்தில் அந்த மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார்.

நீட் மசோதா கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக இருப்பதாக கவர்னர் கருத்து எழுதி திருப்பி அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கவர்னரின் இந்த நடவடிக்கை அனைத்து கட்சி தலைவர்களிடமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வு விலக்கு அளிக்க மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வரும் நிலையில் அடுத்த கட்டமாக எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது பற்றி முடிவு செய்ய அனைத்து கட்சி கூட்டத்துக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்தது.

அதன்படி சென்னை தலைமை செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) காலை சட்டசபை அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மா.சுப்பிரமணியன் பங்கேற்றனர். காங்கிரஸ் சார்பில் செல்வ பெருந்தகை, பா.ம.க. சார்பில் வெங்கடேஸ்வரன், ம.தி.மு.க. சார்பில் டாக்டர் ரகுராமன் பங்கேற்றனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தளி ராமச்சந்திரன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாகை மாலி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிந்தனை செல்வன், மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈஸ்வரன் கலந்து கொண்டனர்.

 

அவர்கள் நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்த கட்டமாக தமிழக அரசு என்ன செய்ய வேண்டும் என்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் தமிழக அரசுக்கு இருக்க கூடிய சட்ட வாய்ப்புகள் தொடர்பாகவும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

நீட் மசோதா விஷயத்தில் கவர்னர் கேட்டிருக்கும் விளக்கங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு உரிய பதில் அளித்து மீண்டும் மசோதாவை கவர்னருக்கு அனுப்ப வேண்டும் என்று கூட்டத்தில் பேசிய அனைத்து கட்சி பிரதிநிதிகளும் வலியுறுத்தினார்கள். எனவே மீண்டும் சட்டசபையை கூட்டி மசோதாவை அப்படியே நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்புவது பற்றி விவாதிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டுவது தொடர்பாகவும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அனைத்து கட்சி கூட்டம் சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது.

கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் தீர்மானமாக வெளியிடப்பட்டது. அதன்படி தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் விரைவில் கூட உள்ளது. அந்த கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா கொண்டு வரப்பட்டு மீண்டும் கவர்னருக்கு அனுப்பப்பட உள்ளது.

சட்டசபை சிறப்பு கூட்டம் விரைவில் கூடுகிறது- மசோதாவை மீண்டும் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்ப ஏற்பாடு.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )