தலைப்பு செய்திகள்
தனியார் நிறுவனங்களின் பால் விற்பனை விலை உயர்வுக்குக் கண்டனத்திற்குரியது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம் எச் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் சிறு தனியார் பால் நிறுவனங்கள் சில நாட்களுக்கு முன்பு தங்களது விற்பனை விலையை உயர்த்தின. தற்போது திருமலா, ஹெரிடேஜ், ஜெர்சி, டோட்லா உள்ளிட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பால் விற்பனை விலையை ஒரு லிட்டருக்கு இரண்டு ரூபாயிலிருந்து நான்கு ரூபாய் வரை உயர்த்தியுள்ளன.
கொரோனா பெருந் தொற்று காரணமாகத் தமிழகத்தில் ஊரடங்கு நிலவிவந்த சூழ்நிலையில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை உற்பத்தியாளர்களிடமிருந்து மிகக் குறைந்த விலைக்கு வாங்கி விற்பனை விலையை குறைக்காமல் விற்று வந்ததாகத் தெரிகிறது. தற்போது கொள்முதல் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு என்கிற பொருந்தாத காரணத்தைக் கூறி பால் விற்பனை விலையை உயர்த்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தின் தினசரி பால் தேவையில் 16 சதவீதத்தை மட்டுமே அரசின் நிறுவனமான ஆவின் பால் பூர்த்தி செய்கிறது. மீதமுள்ள 84 சதவீத தேவையைத் தனியார் பால் நிறுவனங்கள் தான் பூர்த்தி செய்கின்றன. இன்னிலையில் தனியார் நிறுவனங்களின் விற்பனை விலை உயர்த்தப்பட்டு இருப்பது தமிழ்நாட்டு மக்களின் நிதிச்சுமையை அதிகரிக்கச்செய்யும். எனவே தமிழக அரசு இவ்விஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்தி தனியார் பால் நிறுவனங்களின் விற்பனை விலையை வரன்முறை செய்து பால் உற்பத்தியாளர்களையும் நுகர்வோர்களையும் பாதுகாக்க வேண்டுமாய் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று ஜவாஹிருல்லா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.