தலைப்பு செய்திகள்
அஜித்குமார் நடித்த வலிமை திரைப்படம் வெளியான தியேட்டரில் போலீசை கடித்த தல வெறியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நடிகர் அஜித்குமார் (AK) நடித்த வலிமை திரைப்படம், நேற்று உலகமெங்கும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.நேற்று அதிகாலை வெளியான படத்திற்காக, தியேட்டர்கள் முன்பு, ப்ளக்ஸ் பேனர்கள் வைத்து, தோரணங்கள் கட்டி, மேள, தாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து, ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடினர்.
அதேநேரத்தில், ‘கொண்டாட்டம்’ என்ற பெயரில் சில இடங்களில் ரசிகர்கள் அடித்த கூத்துகளும் பேசுபொருளாகி உள்ளது. அதிலும் குறிப்பாக, திருச்சி மாவட்டம் லால்குடி திரையரங்கில், போலீஸ் ஒருவரை, இரண்டு அஜித் ரசிகர்கள் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அன்பு தியேட்டரில் நேற்று அதிகாலை, வலிமை படத்தின் ரசிகர்கள் ஷோ திரையிடப்பட்டது. ரசிகர்களின் பலத்த கர கோஷங்களுக்கிடையே ‘டைட்டில்’ காட்சி ஓடியது. அப்போது ‘உற்சாக’ மிகுதியில் இருந்த இருவர், திரையின் முன்பு நின்று நடனமாடி உள்ளனர். மேலும், அஜித் வரும் காட்சியின் போது திரைக்கு அருகிலேயே சரவெடியை கொளுத்த முயன்றுள்ளனர்.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த லால்குடி காவல்நிலைய காவலர் சுரேஷ், அவர்கள் இருவரையும் தடுத்துள்ளார். இதனால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவலர் சுரேஷ் சரமாரியாக தாக்கியதால் ஆத்திரமடைந்த இருவரும், அவரின் காக்கிச் சட்டையை கிழித்ததோடு, தோள்பட்டையில் கடித்து வைத்து விட்டனராம்.
இதுகுறித்து காவலர் சுரேஷ் லால்குடி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், டால்மியாபுரத்தை சேர்ந்த அஜித் ரசிகர்கள் அருண்குமார் (25), கோபிநாத் (24) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.