தலைப்பு செய்திகள்
வேளாண் கருவிகள் கண்டுபிடிப்பில் அசத்தும் கிருஷ்ணகிரி விவசாயி; குவியும் வாழ்த்துக்கள்.
விவசாயத்திற்கு புத்துயிர் கொடுப்பதில் விவசாயிகளே சில சமயம் தயாரிக்கும் வேளாண் கருவிகள் முக்கியமானதாக அமைகின்றன. தனக்குத் தேவையான விவசாய கருவிகளை தானே தயாரித்து வியக்க வைக்கிறார் விவசாயி ஒருவர்.
உலகிற்குத் தேவையான உணவை உற்பத்தி செய்து கொள்ளும் விவசாயிகள், தங்களது உழவுக்கு தேவையான நவீன கருவிகளையும் அவ்வப்போது கண்டறிந்து வியக்க வைக்கின்றனர். அப்படி விவசாயத்திற்குத் தேவையான கருவிகளை தானே சுயமாக சிந்தித்து தயாரித்துக் கொண்ட ’வில்லெஜ் விஞ்ஞானி’ செல்வராஜ் பற்றி விளக்குகிறது இந்த தொகுப்பு..
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அஞ்செட்டி தாலுக்காவில் உள்ள சேசுர்ஜாபுரம் கிராமம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். தனக்கு சொந்தமான 2.75 ஏக்கர் பண்ணையில் நிலக்கடலை, தக்காளி, கேரட், பீன்ஸ், தினை போன்றவற்றை பயிரிட்டு வருகிறார். ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு போன்ற காரணங்களால் தனது நிலத்தில் விவசாயம் செய்ய தேவையான கருவிகளை தானே தயாரித்துக்கொள்வது என செல்வராஜ் முடிவெடுத்தார்.
சைக்கிள் டயர் மற்றும் அதன் உதிரி பாகங்கள், பிளேடு, மரக் கட்டைகள் ஆகியவற்றைக் கொண்டு விவசாயத்திற்குத் தேவையான கருவிகளை வடிவைக்கும் முயற்சியில் இறங்கினார். பல வருட சோதனைக்குப் பிறகு, விதைப்பு, உழவு, களையெடுத்தல், பாத்திகள் அமைத்தல் உள்ளிட்ட பல புதுமையான கருவிகளை உருவாக்கி வெற்றி கண்டுள்ளார்.
“எனக்கு பெரிதாக படிப்பு கிடையாது. எல்லாமே அனுபவம் தான். நிலத்தில் வேலை செய்யும் போது இதை எல்லாம் செய்ய கருவிகள் இருந்தால் நேரம் மற்றும் ஆட்கள் தேவை குறையும் என நினைத்தேன். அதனால் பார்த்த, கேட்ட மற்றும் பல வருட விவசாயத்தில் ஒன்று திரட்டிய அறிவை வைத்து சொந்த பயன்பாட்டிற்காக சில விவசாயக் கருவிகளை உருவாக்கினேன்,” என்கிறார்.
சைக்கிள் உதிரி பாகங்கள் போன்ற சாதாரண பொருட்களை வைத்தே விவசாய கருவிகளை உருவாக்கி வரும் செல்வராஜ், பிற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் யாராவது அவர்களது தேவைக்கு ஏற்ற வகையில் கருவிகளை வடிவமைத்து கொடுக்கிறார். அதற்கு அதிக லாபம் வைக்காமல் தனது உழைப்பிற்கான ஊதியத்தை மட்டுமே பெற்று வருகிறார்.
உதாரணமாக ஒரு களை வெட்டும் கருவியை உருவாக்க இரும்பு ராடு, அதற்கான கட்டிங், வெல்டிங் பணிகள் எல்லாம் சேர்ந்து ரூ.1500 என்றால், அதனை 2 ஆயிரம் ரூபாய்க்கு கொடுப்பதாக சொல்கிறார்.
கருவிகள் செய்து கொடுப்பது மட்டுமின்றி, விவசாயிகளுக்கு பயிர்களின் தன்மை, அறுவடை பருவம், பூச்சி தொந்தரவு போன்ற பிரச்சனைகளுக்கும் ஆலோசனை வழங்கி வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டுமின்றி சுற்றியுள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் போனிலோ, நேரிலோ வந்து செல்வராஜிடம் ஆலோசனை பெற்று செல்கின்றனர்.
அதுமட்டுமின்றி 5 ஆண்டுகள் வரை பலன் கிடைக்கக் கூடிய கத்திரி செடியை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். வழக்கமான கத்தரி செடி 7 மாதங்கள் மட்டுமே பலன் கொடுக்கும். ஆனால், விவசாயி செல்வராஜ் சுண்டக்காய் செடியுடன், கத்தரிக்காய் செடியை ஒட்டுபோட்டு 5 ஆண்டுகள் பலன் தரக்கூடிய கத்தரி செடியை உருவாக்கியுள்ளார்.
அனைத்துமே டிஜிட்டல் மையமான ஆன்லைன் யுகத்தில் விவசாயத்தையும் அடுத்தக்கட்டம் நகர்த்தியுள்ளார் செல்வராஜ்.
சாதாரண விவசாயிக்கு சோசியல் மீடியா எதுக்கு? இந்த வயதிற்கு மேல் அதை கற்றுக்கொண்டு என்ன செய்யப்போகிறேன்? என வழக்கமாக முதியவர்கள் எண்ணுவது போல் அல்லாமல், 58 வயதிலும் சோசியல் மீடியாவில் புகுந்து விளையாடி வருகிறார்.
ஃபேஸ்புக், வாட்ஸ் அப், யூடியூப் என சோசியல் மீடியா மூலமாக விவசாயம் பற்றி விளக்கமளித்து வருகிறார். தனது அன்றாட விவசாய நிகழ்வுகள், மழை பற்றிய அப்டேட் ஆகியவற்றை ஃபேஸ்புக் மற்றும் யூடியூப்பில் வீடியோவாக பதிவேற்றி வரும் செல்வராஜ், விவசாயிகள் கேட்கும் கருவிகளை செய்து கொடுக்கவும், அவர்களது சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் பிரத்யேக வாட்ஸ் அப் அக்கவுண்ட் வைத்திருக்கிறார்.
சோசியம் மீடியாவில் அவருக்கு மகன்கள் தான் கணக்கை ஆரம்பிக்க உதவியுள்ளனர். ஆரம்ப காலத்தில் வீடியோ, புகைப்படம் போன்றவற்றை பதிவேற்றி வந்துள்ளனர். நாளடைவில் மகன்களின் உதவியுடன் ஃபேஸ்புக், வாட்ஸ அப், யூடியூப் பற்றி அறிந்து கொண்ட செல்வராஜ், தற்போது வீடியோக்கள், போட்டோக்களை பதிவேற்றுவது, கேள்விக்களுக்கு ஆன்லைனில் பதிலளிப்பது என ஹைடெக் விவசாயியாக மாறியுள்ளார்.