BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

செல்லூர் ராஜூவின் சர்ச்சை பேச்சு.. ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ – சசிகலா சூசகம்.

அதிமுகவில் தலைமையே கிடையாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை உணர்ந்து அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வி.கே. சசிகலா அழைப்பு விடுத்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாளையொட்டி மதுரை கே.கே. நகரில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் தலைமையே கிடையாது என்றும் ஜெயலலிதா இருந்த போது நடைபெற்ற தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றியை தற்போது எதிர்பார்க்க முடியாது என்றும் தெரிவித்தார்.

சென்னை ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பேசிய வி.கே சசிகலா, 50 ஆண்டு கால வரலாற்றில் அதிமுக தொடர் தோல்வியை கண்டதில்லை என்றும் இதை மனதில் எண்ணி பார்த்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட உறுதி ஏற்போம் என்றும் தெரிவித்தார்.

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமமுக பொதுசெயலாளர் தினகரன், திமுகவை வீழ்த்துவதற்காக தான் பல்வேறு தியாகங்களை செய்ததாகவும் அதை அதிமுகவினர் புரிந்து கொள்ளவில்லை என்றும் ஆதங்கம் தெரிவித்தார்.சென்னையில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அதிமுக நிர்வாகி புகழேந்தி, ஓபிஎஸ், ஈபிஎஸ் அதிமுகவில் இருந்து விலகினால் தான் கட்சியை காப்பாற்ற முடியும் என காட்டமாகத் தெரிவித்தார்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )