தலைப்பு செய்திகள்
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ் மாணவர்- உதவி கேட்டு உருக்கம்.
உக்ரைனில் விமான போக்குவரத்து முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் உதவி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடும் போர் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து உக்ரைனில் உள்ள புல்தவா மாகாணத்தில் 4 ஆம் ஆண்டு மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர் முகமது யாசிக் என்பவர் விமான போக்குவரத்து முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள வீடியோவில், “ரஷ்யா உக்ரைனின் தலைநகரைத் தாக்கி விட்டார்கள். முக்கியமாகப் போக்குவரத்து மற்றும் ராணுவத் தளவாடங்களைத் தாக்கி அழித்து விட்டார்கள். மேலும், விமான தளங்களையும் தாக்கி அழித்து விட்டதால் தனியார் மற்றும் அரசு விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.இதனால் தான் உட்பட தன்னுடன் பயிலும் இந்திய மாணவர்களும் ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். உக்ரைனின் தலைநகரம் க்யூவிற்கும், ரஷ்ய எல்லைக்கும் நடுவில் உள்ள புல்தவா என்ற மாகாணத்தில் இருப்பதாகவும், உணவு, தங்குமிடத்திற்கு ஏதும் பிரச்சினை இல்லை.
சில மாணவர்கள் ஊருக்குத் திரும்பப் பணமில்லாமலும் தவித்து வருகின்றனர். இந்தியத் தூதரகம் முன் கூட்டியே தகவல் தெரிவித்திருந்தால் ஊருக்குத் திரும்பியிருப்போம். இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.