தலைப்பு செய்திகள்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் கடந்த 19-ந்தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது கள்ள ஓட்டு பிரச்சினை தொடர்பாக தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் தி.மு.க. தொண்டரான நரேஷ்குமார் என்பவரை பிடித்து அவரது சட்டையை கழற்றி ஊர்வலமாக அழைத்து சென்று போலீசில் ஒப்படைத்தனர். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் தண்டையார்பேட்டை போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது 10 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே தி.மு.க. தொண்டரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜெயக்குமாரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயக்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தேவையில்லை எனக்கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.