தலைப்பு செய்திகள்
இன்று 3ம் ஆண்டு நினைவு தினம்!- புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி.
புல்வாமா தாக்குதல் சம்பவத்தின் 3-வது நினைவு தினத்தையொட்டி பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. “பயங்கரவாதத்தை வேரறுக்க உங்களின் வீரம் எங்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன. அப்போது, பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் பயங்கரவாதி ஒருவன், வெடிகுண்டுகள் நிரப்பிய தனது காரை வெடிக்கச் செய்தான். இதில், ஒரு பஸ்சில் சென்று கொண்டிருந்த 39 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களும், களப்பணியில் இருந்த ஒரு அதிகாரியும் பலியானார்கள். இதற்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாமை இந்திய போர்விமானங்கள் தாக்கி அழித்தன.
இந்தநிலையில், புல்வாமா தாக்குதலின் 3-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், பலியான வீரர்களுக்கு புகழஞ்சலி செலுத்தினார். அதில், “புல்வாமாவில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலில் தங்களின் உச்சபட்ச தியாகத்தைச் செய்து நாட்டின் இறையாண்மையை நிலைநாட்டிய மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் துணிச்சலான ஜவான்களுக்கு இதயப்பூர்வமான அஞ்சலி. உங்கள் தியாகத்திற்கு தேசம் என்றும் கடமைப்பட்டிருக்கும். பயங்கரவாதத்தை வேரறுக்க உங்களின் வீரம் எங்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கும்” என்று கூறியுள்ளார்.
அதுபோல், புல்வாமா மாவட்டம் லேத்போராவில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாமில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. பலியான வீரர்களின் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.