தலைப்பு செய்திகள்
பெற்றோர் கவனத்திற்கு. நாளை போலியோ சொட்டு மருந்து முகாம். குழந்தைகளுக்கு மறக்காம போடுங்க.
தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு நாளை போலியோ சொட்டு மருந்து போடப்படவுள்ளது. இதற்காக 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழகத்தில் நாளை 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் இந்த முகாம் நடைபெறவுள்ளது.
இம்மையங்களில் 47.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை முகாம் நடைபெறவுள்ளது. காய்ச்சல், இருமல் மற்றும் கோவிட் தொற்று இருந்தால் மையங்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுப்பது அவசியம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும் என்றும் சொட்டு மருந்து போடாமல் விடுபடும் குழந்தைகளை கண்டறிய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொட்டு மருந்து போடும் பணியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதனிடையே, பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,பெருநகர சென்னை மாநகரில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 6.68 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுப்பதற்கு 1,647 சொட்டுமருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டுமருந்து முறையாக கொடுத்திருந்தாலும் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும் தீவிர போலியோ சொட்டுமருந்து முகாமில் குழந்தைகளுக்கு அவசியம் சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும். இது ஒரு கூடுதல் தவணையாகும்.
இதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், ரெயில்வே நிலையங்கள், பஸ் நிலையங்கள் ஆகிய இடங்களில் சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் மெரினா கடற்கரை, கோயம்பேடு புறநகர் பஸ் நிலையங்களில் நடமாடும் சொட்டுமருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.