தலைப்பு செய்திகள்
மருத்துவக் கல்லூரியில் சேர பிப்ரவரி 18ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு!!
பிப்.18 ஆம் தேதி வரை முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்ந்துக்கொள்ளலாம் என்று மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயண பாபு தெரிவித்துள்ளார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் 2021 -22 ஆம் கல்வியாண்டில் சேர்ந்துள்ள முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் கல்லூரி விடுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. அதன்படி நூலகத்தில் கூட்டம் கூடவோ, கல்லூரியில் விழாக்கள் ,கூட்டங்கள் நடத்தவும் அனுமதி இல்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை வகுப்பறைகளில் எல்லா மாணவர்களும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ள மாணவர்களிடமிருந்து எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயண பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, மருத்துவக் கல்லூரியில் சேர இன்று கடைசி நாள் அல்ல; பெற்றோர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. பிப்ரவரி 18 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 16ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கும்.மருத்துவக் கல்லூரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது பற்றி புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். 7.5 % உள்ஒதுக்கீட்டின் கீழ் அரசுப்பள்ளி மாணவர்களில் 544 மாணவர்களில் 541 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர் என்றார்.