BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

“நடந்ததை நான் தேர்தலாகவே பார்க்கவில்லை”

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஐந்தாவது இடத்தை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. மாநகராட்சி, நகராட்சி ஆகியவற்றில் ஓர் இடத்தைக்கூட அக்கட்சி பெறவில்லை.

இந்நிலையில் ` தி.மு.கவும், பா.ஜ.கவும் பேசி வைத்துக் கொண்டு இந்தத் தேர்தலில் செயல்பட்டுள்ளனர். நேர்மையாக தேர்தலை எதிர்கொண்டதாக ஸ்டாலின் சொல்வாரா?’ எனக் கேள்வியெழுப்புகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 12,607 இடங்களுக்குக் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 21 மாநகராட்சிகள் உள்பட பெரும்பான்மையான நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை தி.மு.க கூட்டணியே கைப்பற்றியது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி, பா.ம.க, அ.ம.மு.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் தனித்துக் களமிறங்கின.

இதில், மாநகராட்சிகளில் நாம் தமிழர் கட்சி 2.51 சதவீத வாக்குகளையும் நகராட்சிகளில் 0.74 சதவீத வாக்குகளையும் பேரூராட்சிகளில் 0.80 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. இதில், பேரூராட்சிகளில் ஆறு கவுன்சிலர் பதவிகளை மட்டுமே அக்கட்சி பெற்றுள்ளது. மாநகராட்சி, நகராட்சி ஆகியவற்றில் ஓர் இடத்தைக்கூட பெறவில்லை.

நான் மூன்றாவது, நான்காவது இடத்துக்கெல்லாம் சண்டையிடவில்லை. முதலாவது இடத்துக்கு வருவதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறேன். இந்தமுறை தேர்தலாகத்தான் இது நடந்ததா? மத்தியில் ஆள்பவர்களும் மாநிலத்தில் உள்ளவர்களும் பேசி வைத்துக் கொண்டுதான் செயல்படுகிறார்கள். நோட்டாவுக்குக் கீழே ஆர்.கே.நகரில் வாக்குகளைப் பெற்ற ஒரு கட்சி, இத்தனை இடங்களைப் பிடித்ததாகப் பேசிக் கொள்கிறார்கள். பணம் கொடுக்காமல் அராஜகம் செய்யாமல் கள்ள ஓட்டு போடாமல் இந்தத் தேர்தலை சந்தித்தார்களா?” எனக் கேள்வியெழுப்புகிறார் சீமான்.
தேர்தலாகவே பார்க்கவில்லை

“இதனை ஒரு தேர்தலாகவே நான் பார்க்கவில்லை. இவை அனைத்தும் முடிவு செய்யப்பட்ட ஒன்று. பல இடங்களில் வாக்குப்பெட்டிகள் சீல் உடைக்கப்பட்டு திறந்தே வந்தன. அதை எடுத்து ஆவணப்படுத்தி எங்கள் கட்சியின் நிர்வாகிகள் வெளியிட்டனர். சென்னையில் தொடக்கத்தில் 32 சதவீத வாக்குகள் பதிவாகின. மாலை 5 முதல் 6 மணி வரையில் கொரோனா நோயாளிகள் வாக்குப்பதிவு செய்ய நேரம் ஒதுக்கப்பட்டது. அந்த ஒரு மணிநேரத்தில் 12 சதவீத வாக்குகள் பதிவாகி, 44 சதவீதமாக மாறியது. அவ்வளவும் கள்ள வாக்குகள். கொரோனா நோயாளிகள் அனைவரும் வந்து வாக்களித்தார்களா?,” என்று கேட்டார் சீமான்.

மேலும் இது குறித்துப் பேசிய சீமான், “மாம்பலத்தில் வென்ற பா.ஜ.க வேட்பாளர், கோட்சேவை தலைவராக ஏற்றுக் கொண்டு, `காந்தியைக் கொன்றது சரி’ எனப் பேசியவர். அவருக்கு எதிராக தி.மு.க ஏன் நேரடியாகப் போட்டியிடவில்லை? எந்த காங்கிரஸ் தலைவர் அங்கே போய் பிரசாரம் செய்தார்?

பாஜகவும் திமுகவும் ஒப்பந்தம் செய்துகொண்டு போட்டியிட்டதாக எதை அடிப்படையாகக் கொண்டு சொல்கிறீர்கள் என்று கேட்டபோது அதற்கு அவர் நேரடியாக எந்தக் காரணத்தையும் கூறவில்லை.

தேர்தல் செலவுகளுக்கே நாம் தமிழர் கட்சி சிரமப்பட்டதாக கூறியிருந்தார்களே? என்று அவரிடம் கேட்டபோது,

“ஆமாம். இந்தமுறை 3,000 பேரைத்தான் வேட்பாளர்களாகப் போட முடிந்தது. அதற்கு மேல் கட்டுத்தொகை (டெபாசிட்) கட்டுவதற்குப் பணம் இல்லை. துண்டறிக்கை, சுவரொட்டி ஆகியவற்றை அச்சசடிப்பதற்கும் பணம் இல்லை. இருப்பினும், முடிந்தவரையில் சண்டையிட்டோம்.

மக்களிடம் வெறுப்புணர்வு வரும்போது கிளர்ச்சி வரும். கொரோனா என்றொரு நோய்த் தொற்று வரும், அது உலகத்தைப் புரட்டிப் போடும் என யாராவது எதிர்பார்த்தார்களா? அதேபோல ஒரு பெரும்காற்று வீசும்போது இங்கு எதுவுமே இருக்காது. அதுபோல ஒரு மக்கள் புரட்சி இங்கே வெடிக்கும்,” என்றார்.

சட்டமன்றத் தேர்தலில் 7 சதவீத வாக்குகளைப் பெற்ற நாதக, அடுத்து வந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அந்த அளவு வாக்குகளைப் பெறவில்லையே?” என்று கேட்டபோது,

“நாங்கள் யாரிடம் நம்பிக்கையைப் பெற வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? தி.மு.க ஆட்சியின் சாதனைக்காகத்தான் மக்கள் வாக்களித்தார்களா? ஆட்சியின் சாதனையைச் சொல்லி வாக்கு கேட்டார்களா? மிக்சி, கிரைண்டர், ஹாட்பாக்ஸ் ஆகியற்றைக் கொடுத்து வாக்கு கேட்டார்கள். இதில், சாதனை என்ற வார்த்தை எதற்கு?” என்று பதில் அளித்தார் சீமான்.

அப்படியே பார்த்தாலும், மேற்கு மண்டலம் முழுக்க தி.மு.க பக்கம் வந்ததற்குப் பணம் மட்டுமே காரணம் எனக் கூறமுடியுமா? என்று கேட்டபோது,

“மேற்கு மண்டலத்தில் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் 700 கோடி ரூபாயை செலவிட்டனர். ஒரு வார்டுக்கு மட்டும் 75 கோடி செலவிட்டுள்ளனர். இதை நான் சொல்லவில்லை. ஊடகங்கள் எழுதியுள்ளன.

பணம் மட்டுமே காரணம் இல்லையென்றால் எதற்காக பணம் கொடுக்க வேண்டும்?

ஓட்டுக்கு நான்காயிரம், பத்தாயிரம் எனக் கொடுப்பதற்குப் பணம் உள்ளது. குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாயும் பொங்கலுக்கு ஐந்தாயிரம் கொடுப்பதற்கும் பணம் இல்லை. நகைக்கடன் தள்ளுபடிக்கும் பணம் இல்லை. காரணம், அரசாங்கத்திடம் இருக்க வேண்டிய பணம் முன்னாள், இந்நாள் அமைச்சர்களிடம் இருக்கிறது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறவர்கள், பணம் கொடுத்து வாக்கு கேட்க மாட்டார்கள்.”

முன்கூட்டியே தேர்தலுக்குத் தயாராகாததும் நாம் தமிழர் கட்சியின் பின்னடைவுக்கான காரணமா? என்று கேட்டபோது,

“ஆமாம். தேர்தல் வருவது குறித்து அவர்களுக்கெல்லாம் முன்கூட்டியே தெரியும். எங்களுக்குத் தெரியவில்லை. `திரள் நிதி திரட்டல்’ முறையில் நிதி கேட்டோம். அதில் ஐந்தாறு லட்சம்தான் கிடைத்தது. சற்று முன்கூட்டியே நிதி திரட்டியிருந்தால் 30 லட்ச ரூபாய் வரையில் கிடைத்திருக்கும். அதை வைத்துக் கூடுதலாக களப்பணி செய்திருக்க முடியும். பல இடங்களில் சாதி, ஊர் கட்டுமானம் எனக் கூறி, `போனமுறை அந்த சாதிக்குக் கொடுத்தோம். இந்தமுறை இந்த சாதிக்குக் கொடுக்கிறோம் எனப் பேசி முடிவெடுத்துவிட்டனர்”.

“இஸ்லாமியர் என்றால் ஜமாத்தில் பேசி முடிவு செய்கின்றனர். `கிறிஸ்துவர் என்றால் இவருக்குத்தான் வாக்கு’ என பிஷப் கூறிவிடுகிறார். இவையெல்லாம் அனைவரும் அறிந்ததுதான். டெல்லியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஓர் இடத்தில்கூட வெல்லாத கெஜ்ரிவால், அடுத்து வந்த சட்டசபைத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்துவிட்டார். இங்கு முதலிடத்துக்காக வருவதற்காகத்தான் போட்டி போடுகிறேன்” என்றார் சீமான்.

இன்னும் அடித்தட்டு வரையில் உங்கள் கட்சி செல்ல வேண்டியிருப்பதை இந்தத் தேர்தல் உணர்த்தியுள்ளதா? என்று கேட்டபோது,

“நாங்கள் நிச்சயமாக செல்வோம். தொடக்கத்தில் இருந்து தி.மு.கவை ஸ்டாலினே கரையேற்றினாரா? எடப்பாடியே அ.தி.மு.கவை ஆரம்பத்தில் இருந்து கரையேற்றினாரா? `கடந்த 3 ஆண்டுகளில் உழைத்து பா.ஜ.கவை முன்னேற்றினோம்’ என அண்ணாமலை கூறுகிறார்.

நான் பிறக்கும்போது இருந்தே ஆர்.எஸ்.எஸ் இருக்கிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பு இருக்கிறது. அதன் அரசியல் வடிவம்தானே பா.ஜ.க. நான் படிக்கும் காலத்திலேயே இவர்கள் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்தனர்.”

22 மாநகராட்சி வார்டுகளில் பா.ஜ.க வென்றுள்ளதே? என்று கேட்டபோது,

“இதுவே வெற்றி என்றால் எப்படி? ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது மத்தியில் வலிமையாக இருந்தனர். ஆனால், நோட்டாவுக்குக் கீழே வாக்குகளைப் பெற்றனர். தி.மு.கவும் பா.ஜ.கவும் நல்ல புரிதலுடன்தான் உள்ளனர். இவ்வளவு வளர்ச்சியைக் கண்டுவிட்டதாக சொல்கிறவர்கள், நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடட்டுமே? அன்றைக்கு இவர்களின் வலிமை என்ன என்பது தெரிந்துவிடும். மதம், சாதி பேசும் இவர்களா அல்லது மண், மக்கள் நலம் பேசும் நாங்கள் இருக்கிறோமா எனப் பார்த்துவிடலாம்” என்றார் சீமானம்.

மூன்றாவது இடம் எங்களுக்குத்தான் என பா.ஜ.கவும் காங்கிரஸ் கட்சியும் மோதிக் கொள்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்? என்று கேட்டபோது,

அவர்கள் அந்த இடத்தில்தான் கடைசி வரையில் இருக்க முடியும். பா.ஜ.க தனித்து நின்றாலும் பல இடங்களில் அ.தி.மு.க அவர்களை ஆதரித்தது. தி.மு.கவும் ஆதரித்தது. இவை அனைத்தும் வெளியில் தெரியவில்லை, அவ்வளவுதான். எனக்கு வாக்களித்தால் பா.ஜ.க வந்துவிடும் என தி.மு.க ஏன் கூறியது? அப்படியானால் அவர்கள் வரட்டும் என்றுதானே விரும்புகிறது?”.
பாஜக வளரவில்லையா?

அப்படியானால் பா.ஜ.க வளரவில்லை என்கிறீர்களா? என்று கேட்டபோது,

“பா.ஜ.கவுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏன் வந்தது? மாநகராட்சி மாமன்றத்தில் பதவியேற்று இவர்கள் எதாவது செய்வார்கள் என நம்பித்தான் மக்கள் வாக்களித்தார்களா? பா.ஜ.க வெற்றி பெற்றால் குடிதண்ணீர், சாலை வசதி கிடைக்குமா? இவர்கள் ஆளும் மாநிலங்களில் எல்லாம் இந்த வசதிகள் எல்லாம் செய்யப்பட்டுவிட்டதா?”
ஸ்டாலின்-சீமான்

பட மூலாதாரம், TNDIPR
படக்குறிப்பு,

ஸ்டாலின்-சீமான்

உள்ளாட்சிக்கான 70 சதவீத நிதியை மத்திய அரசு கொடுப்பதாகத்தானே பா.ஜ.க பிரசாரம் செய்தது? என்று கேட்டபோது,

“இதுவரையில் என்ன செய்தார்கள்? மாநிலத்துக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி தொகையை இன்னும் தரவில்லை என முதலமைச்சரே கூறுகிறார். இந்தியாவிலேயே மத்திய பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் பணத்தை வைத்துதான் அவர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

எங்களுக்கு வரவேண்டிய 12,000 கோடி ஜி.எஸ்.டி நிலுவையைத் தொகை கொடு என்கிறோம். முதலில் அதனைத் தரட்டும். `நிதி வலிமை இல்லை’ என்று கூறிவிட்டு, பிறகு நாங்கள்தான் கொடுக்கிறோம் என்பது. எத்தனை காலத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்காக கல்லை மட்டுமே நடுவார்கள்? நான்கு கற்களையாவது அடுக்கிக் காட்டட்டுமே. அந்தக் கல்லையும் உதயநிதி எடுத்துக் கொண்டு போய்விட்டார்” என்றார் சீமான்.
அ.தி.மு.கவுக்கு ஏற்பட்ட பின்னடைவை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்தக் கேள்விக்கு பதில் அளித்த சீமான்,

“தேர்தலில் பின்னடைவு, முன்னடைவு என்றெல்லாம் எதுவும் இல்லை. ஒருமுறை வரும், மறுமுறை இறங்குவது என்பது இயல்பானதுதான். காற்று எப்போதுமே சீராக வீசுவதில்லை. பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்கு வந்து, `நான் நேர்மையாக இந்தத் தேர்தலை எதிர்கொண்டு வென்றேன்’ என தி.மு.க தலைவர் ஸ்டாலினை கூறச் சொல்லுங்கள். நான் அரசியலையே நிறுத்திக் கொள்கிறேன்.

இதை ஒரு வெற்றி எனப் பேசிக் கொள்வதே வெட்கக்கேடானது. `நாங்கள் கைப்பற்றினோம்’ என்கிறார் ஸ்டாலின். கைப்பற்றுவது என்பது கையில் கிடைப்பதையெல்லாம் எடுத்துக் கொண்டு ஓடுவது. வாக்குகளைப் பெற்றோம் என்று கூறுவதை விட வாங்கினோம் என அவர்கள் கூறுவதுதான் சரி,” என்றார் சீமான்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )