தலைப்பு செய்திகள்
கோர்ப்வாக்ஸ் தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி.
12 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான கோர்ப்வாக்ஸ் (Corbevax) எனப்படும் கோவிட் தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்பட்டிற்கு மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
டெல்லி: மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம், Biological E என்னும் நிறுவனம் தயாரித்த 12-18 வயதுக்குட்ப்பட்டவர்களுக்கான கோர்ப்வாக்ஸ் (Corbevax) தடுப்பூசியை அவசர கால பயன்பட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கான உத்தரவை நேற்று (பிப். 14) பிறப்பித்துள்ளது. எனினும் இந்த ஒப்புதல் சில நிபந்தனைகளுக்குட்பட்டது.
15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், அப்பணியை மேலும் துரிதப்படுத்தும் விதத்தில் கோர்ப்வாக்ஸ் (Corbevax) தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஏற்கனவே பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின் (Covaxin) மற்றும் அஹமதாபாத்தைச் சேர்ந்த ஸைடஸ் கடில்லா (Zydus Cadilla) நிறுவனத்தின் ZyCovD தடுப்பூசிக்கும் மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் இதுவரை, 15-18 வயதுக்குட்பட்டவர்களில் 1.5 கோடி பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.