தலைப்பு செய்திகள்
தேவகோட்டை நகராட்சியில் கவுன்சிலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு.
தேவகோட்டை நகராட்சியில் கவுன்சிலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி கவுன்சிலர்களான கே.எஸ். சுந்தரலிங்கம், நிரோசா, எஸ்.ரமேஷ், ஆர்.ராதிகா உட்பட 15 கவுன்சிலர்கள் உயர்நீதிமன்ற கிளையில் புகார் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் கூறியிருந்ததாவது, தேவகோட்டை நகராட்சி தேர்தலில் எதிர்க் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் மொத்தம் 27 பேர். அதில் தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்வு செய்ய 16 கவுன்சிலர்கள் இருந்தால் போதும் ஆனால் நாங்கள் 15 கவுன்சிலர்கள் இருக்கிறோம். அதனால் எங்களில் ஒருவர் தலைவராகவும் துணைத் தலைவராகவும் தேர்வாக வாய்ப்பு அதிகம் உள்ளது என தெரிவித்திருந்தனர்.
மேலும் தற்போது ஆளும் கட்சியான திமுகவை சேர்ந்தவர்களை தலைவர் அல்லது துணைத் தலைவராக தேர்வு செய்யும் நோக்கில் திமுகவினர் எங்களை மிரட்டுகின்றனர் எனவும் அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் மறைமுகமாக தங்களை திமுகவுக்கு ஆதரவு அளிக்க கூறி தொல்லை செய்ததாகவும், அப்படி ஆதரவு அளிக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என மிரட்டல் விடுப்பதாகவும் அவர்களுக்கு மார்ச் 4 ஆம் தேதி வரை போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் மனுவில் தெரிவித்திருந்தனர்.
அந்த மனுவை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் ஆய்வு செய்து விசாரித்து மனுதாரர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க தேவகோட்டை டிஎஸ்பிக்கு உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின் பேரில் தற்போது அந்த கவுன்சிலர்களுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.