BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

யுக்ரேன் நெருக்கடி: ரஷ்யாவை எதிர்க்க மேற்கு நாடுகள் ஆதரவளிப்பது தொடருமா? அதன் விளைவுகள் எப்படியிருக்கும்?

யுக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பும் பணியைத் தொடங்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. வரலாற்றில் முதன்முறையாக இந்த மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

நேற்று மதியம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டேர் லேயன், ரஷ்யா மற்றும் பெலாரஸின் மீதான புதிய குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதோடு, ஐரோப்பிய ஒன்றியத்தின் வான் பரப்பைப் பயன்படுத்த ரஷ்யாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியன் யுக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்புவதாக அறிவித்த சில மணிநேரத்திற்கு உள்ளாக, ஸ்வீடன் யுக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பப்போவதாக அறிவித்தது. அதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட அந்நாட்டுப் பிரதமர் மேக்டெலினா ஆண்டர்சன், ஃபின்லாந்தின் மீது 1939-ஆம் ஆண்டு நடந்த சோவியத் படையெடுப்பிற்குப் பிறகு ஸ்வீடன் ஒரு நாட்டிற்கு ஆயுதங்களை அனுப்புவது இதுவே முதல் முறை என்று தெரிவித்தார்.

ஸ்வீடன், 5,000 ஒற்றைப் பயன்பாட்டு டேங்கர் எதிர்ப்பு லாஞ்சர்கள், 5,000 உடல் கவசங்கள், தலைக் கவசங்கள், மற்றும் 135,000 ரேஷன் பொருட்கள் ஆகியவற்றை அனுப்புவதாகத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்ப்பதற்கு, அமெரிக்காவும் பிரிட்டனும் யுக்ரேனிய படைகளுக்கு பல ஆண்டுகளாகப் பயிற்சி அளித்து வருகின்றன. இப்போது முழுவீச்சிலான படையெடுப்பு நடந்து கொண்டிருக்கிறது. யுக்ரேனின் இந்த நிண்ட கால எதிர்ப்பை எவ்வளவு தூரத்திற்கு ஆதரிப்பது என்பது பற்றிய விவாதமும் உள்ளது.

யுக்ரேனின் பாதுகாப்பு அமைச்சகம், ஊடுருவும் ரஷ்ய படைகளைக் குறி வைக்க பெட்ரோல் குண்டுகளைத் தயாரிக்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் நாட்டில் பலரிடையே எதிர்ப்புணர்வு தெளிவாக வெளிப்படுகிறது.

ரஷ்யாவுடனான எந்தவொரு நேரடி ராணுவ ஈடுபாடு குறித்தும் யுக்ரேன் எச்சரிக்கையாக இருந்தபோதிலும், மேற்கத்திய நாடுகள் படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்கு டேங்கர் எதிர்ப்பு ஆயுதங்கள் போன்ற ராணுவ பொருட்களை வெளிப்படையாக வழங்குகின்றன.

மேலும் பல ஆண்டுகளாக மிகவும் ரகசியமாக, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் உளவுத் துறையும் சிறப்புப் படைகளும் யுக்ரேனிய சகாக்களுக்குப் பயிற்சி அளித்து வருகின்றன.

ஒழுங்கற்ற கொரில்லா போர் என்று அழைக்கப்படும் நுட்பங்களை உள்ளடக்கிய பயிற்சி இது என்று பிபிசியிடம் செய்தி வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் கூறினார். அதோடு, இரண்டாம் உலகப் போரில் சிறப்பு செயல்பாட்டு நிர்வாகியால் மேற்கொள்ளபட்ட வேலைகளுடன் இதை ஒப்பிடுகிறார் தகவல் தெரிவித்தவர்.

இன்னொருபுறம், ஆரம்பக்கால பனிப்போரின் “பின்தங்கும்” திட்டங்கள் உள்ளன என்று தெரிவித்தனர். இதில் சோவியத் டேங்கர்கள் ஐரோப்பா முழுவதும் நகரும்போது ரகசிய ஆயுதக் கிடங்குகள் தயாரிக்கப்பட்டன.

“இரண்டாம் உலகப் போரின் தனித்துவமான விஷயங்கள்” என்று இதைப் பற்றிய ஞானமுள்ள ஒருவர் கூறினார். ரஷ்ய முன்னேற்றத்தின் வேகத்தைக் குறைக்க முயல்வதற்காக அந்தத் திட்டங்கள் இப்போது செயல்படுத்தப்படுகின்றன.

ஆனால், நீண்ட கால எதிர்ப்பை ஆதரிப்பதில் எவ்வளவு தூரம் செல்வது என்பது குறித்து லண்டன் மற்றும் வாஷிங்டனில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். சோவியத் யூனியன் 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது, பதுங்கியிருந்து தாக்குவதன் மூலம் செம்படையை எதிர்த்துப் போராட முயன்ற ஆப்கானிஸ்தான் முஹாஜிதீன் போராளிகளுக்கு, மேற்கு நாடுகள் ஆயுதங்களையும் பயிற்சிகளையும் வழங்கியது.

படைத் தளபதிகளுடன் பணிபுரிய எம்.ஐ.6 குழுக்கள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தன. சிஐஏ பெரியளவிலான ஆயுதங்களை வழங்கியது. இறுதியில் ஸ்டிங்கர் ஏவுகணைகள் உட்பட, சோவியத் துப்பாக்கிக் கப்பல்களை சுட்டு வீழ்த்தியது.

இந்த முயற்சிக்கு பத்து ஆண்டுகள் எடுத்தது. ஆனால் இறுதியில் சோவியத் படைகள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சோவியத் யூனியனில் இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை, அங்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தும் அளவுக்கு இருந்தது. மேலும், ஆப்கனில் ஏற்பட்ட தோல்வி, அதன் சரிவுக்கும் பங்களித்ததாகப் பலர் நம்புகின்றனர்.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய இரு நாடுகளிலும் சமீபத்திய கிளர்ச்சிகளில் சிக்கித் தவிக்கும் மேற்கு நாடுகளுக்கும் அந்தச் சரிவு எப்படி இருக்கும் என்பது தெரியும்.

யுக்ரேனின் ரஷ்ய எதிர்ப்பை ஆதரிப்பதை வெளிப்படையாகவும் வலுவாகவும் வாதிடும் முன்னாள் ராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் இருக்கின்றனர்.

போரிஸ் ஜான்சன் ரஷ்யா மீதான தடைகளைச் சுமத்துவதன் அவசியம் மற்றும் அவர்களுடைய படையெடுப்பு வெற்றி பெறவில்லை என்பதை நிரூபிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிப் பேசுகையில், அவர் பொருளாதாரத் தடைகளைப் பற்றி மட்டும் பேசவில்லை. ரஷ்ய வீரர்களுடைய உயிர் இழப்புகளைப் பற்றியும் பேசுகிறார்.

அது யுக்ரேனின் எதிர்ப்பை ஆதரிப்பது குறித்த விவாதத்தை முக்கியத் தலைப்பாக மாற்றியுள்ளது.

எனவே ஆப்கானிஸ்தான் திட்டம் போன்ற ஏதாவது திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுமா என்றால், அப்படிச் செய்வதைச் சிக்கலாக்கும் பல விஷயங்கள் உள்ளன.

ஒன்று ரஷ்யாவின் மூலோபாயம். ரஷ்யா ஆக்கிரமிப்பதை விரும்பவில்லை என்று கூறுகிறது. அது உண்மையாக இருக்கலாம். இது சம்பந்தப்பட்ட அபாயங்களை ஒருவேளை புரிந்துகொண்டு, அதற்கு இணக்கமான அரசாங்கத்தை நிறுவ விரும்பலாம். ஆனால், நடக்கக்கூடிய நிகழ்வுகள் அது போட்டு வைத்திருக்கும் கணக்கை மாற்றவும் செய்யலாம்.

ஓர் எதிர்ப்பு பயனுள்ளதாக இருப்பதற்கு, பாதுகாப்பான புகலிடம் தேவை.

1980-களில் அமெரிக்கர்களும் பிரித்தானியர்களும் பாகிஸ்தானை ஒரு மறுக்கத்தக்க நடவடிக்கை தளமாகப் பயன்படுத்த முடிந்தது. நிகழ்வுகள் எவ்வாறு நடக்கின்றன என்பதைப் பொறுத்து, யுக்ரேனில் அதையே மீண்டும் செய்ய, நேட்டோவின் ஒரு பகுதியாக இருக்கும் ஓர் அண்டை நாட்டைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

ஆபத்து என்னவெனில், அதை ரஷ்யா ஓர் ஆக்ரோஷமான நடவடிக்கையாகக் கருதி பதிலடி கொடுக்கும். அது பரவலாக ஒரு மோதலைத் தூண்டிவிடலாம்.

ஒருவேளை ரஷ்யா யுக்ரேனை இரண்டாகப் பிரித்தால், நிலைமை வேறு விதமாக இருக்கலாம். இருப்பினும் அது மற்ற வாய்ப்புகளை வழங்குகிறது.

இதற்குத் தொடர்புடைய ஒரு பிரச்னை என்னவெனில், விஷயங்களை ரகசியமாக வைத்திருப்பது கடினம். 1980-களில் ஆப்கானிஸ்தானில் இது சாத்தியப்பட்டிருக்கலாம். ஆனால், 2020-களின் ஐரோப்பாவில் இது மிகவும் கடினமானது. கைபேசி கேமராக்களும் செயற்கைக்கோள்களும் அனைத்து இடங்களிலும் உள்ளன.

ரஷ்யாவும் அதன் உளவுத்துறை அமைப்புகளும், குறிப்பாக யுக்ரேனில் முன்னிலை வகிக்கும் எஃப்.எஸ்.பி-யும் தயாராக இருக்கும். ஏற்கெனவே அவர்கள், எதிர்ப்புகளை வளர விடாமல் தடுப்பதற்காக, அதில் ஈடுபடக் கூடியவர்களின் பெயர்கள் அடங்கிய “பிடி அல்லது கொல் பட்டியல்களை” வரைந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பனிப்போரின் ஆரம்பக் காலங்களில் யுக்ரேன், பால்டிக்ஸ் மற்றும் அல்பேனியா போன்ற இரும்புத் திரைக்குப் பின்னால் இருந்த நாடுகளில் எதிர்ப்பை ஆதரிக்க சி.ஐ.ஏ மற்றும் எம்.ஐ6 மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் மோசமான பேரழிவில் முடிந்தன. எதிர்ப்புக் குழுக்களில் ரஷ்ய உளவாளிகள் ஊடுருவி இருந்ததால், என்ன நடக்கிறது என்பதை ரஷ்யா சரியாக அறிந்திருந்தது.

கடந்த 10 ஆண்டுகளில் சிரியாவில் சண்டையிட குழுக்களுக்குப் பயிற்சி அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியும் தோல்வியடைந்தது.

“எதிர்ப்பை ஆதரித்தல்” என்ற மூலோபாயம், ரத்தக் களரியாகவும் மோசமானதாகவும் இருக்கலாம். அதோடு செச்னியாவில் நடந்தது போன்று, ரஷ்யா அத்தகைய செயல்பாட்டை அடக்குவதற்குக் கொடுமையான முறைகளைப் பயன்படுத்திய வரலாற்றைப் பெற்றுள்ளது. அதாவது யுக்ரேன் மற்றும் ரஷ்யாவின் மக்கள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கலாம். நேற்றிரவு, நேட்டோவின் செயல்பாடுகள் காரணமாக புதின் தனது அணு ஆயுதப் படைப் பிரிவை தயார் நிலையில் இருக்குமாறு புதின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், ஓர் எதிர்ப்பை ஆதரிப்பது ரஷ்யா மீது அதன் படையெடுபிற்கான விலையைச் சுமத்துவதற்கான வாய்ப்புகளில் ஒன்றாகப் பார்க்கப்படலாம். ஆனால், மேற்கத்திய கொள்கை வகுப்பாளர்களும் அது நேரடியான அணுகுமுறை இல்லை என்பதை அறிவார்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )