தலைப்பு செய்திகள்
ரூ.5 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு: ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை காவல்.
முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரை வரும் 11ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ஆலந்தூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்த முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது திமுக பிரமுகரை தாக்கி அரை நிர்வாணமாக சாலையில் இழுத்து சென்ற வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரை தண்டையார்பேட்டை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் ஜெயக்குமார் மீது ராயபுரம் காவல் நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சாலை மறியல் வழக்கில் ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழக்கிய நிலையில், திமுக பிரமுகர் தாக்கிய வழக்கில் முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் தனது 5 கோடி ரூபாய் நிலம் மற்றும் தொழிற்சாலையை ஜெயக்குமார், அவரது மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன் ஆகியோர் அபகரித்ததாக அளித்த புகாரின் பேரில் இவர்கள் மீது மத்தியகுற்றபிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தனர். இவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
அப்போது ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நடராஜன், “இது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என்றும், முன்னாள் அமைச்சராக முன்னாள் சபாநாயகராக இருந்த ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது மிக அநாகரிகமான செயல். போலீஸார் பதிந்துள்ள வழக்கில் ஜெயக்குமாரின் நேரடியான தொடர்பு எங்குமே இல்லை. இந்த வழக்கு முழுவதுமாகவே குடும்ப சொத்து பிரச்சினையை சேர்ந்தது” என வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட குற்றவியல் நீதிமன்ற நடுவர் வைஷ்ணவி, வரும் 11ம் தேதி வரை ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீஸார் ஜெயக்குமாரை பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்து சென்றனர்.