தலைப்பு செய்திகள்
ரஷ்யாவுக்கு எதிராகத் தொலைபேசியை ஆயுதமாக்கிய உக்ரைன் அதிபர்!
நெருக்கடி காலகட்டத்தில் ஒரு நாட்டின் தலைவர் எப்படி நடந்துகொள்கிறார் என்பது முக்கியமானது. ஆக்கபூர்வமாகவும், துணிச்சலுடனும் நடந்துகொள்ளும் தலைவர்களுக்குப் பல முனைகளிலிருந்து ஆதரவு கிடைத்துவிடும். ரஷ்யாவின் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கும் உக்ரைன் நாட்டின் அதிபர் ஸெலன்ஸ்கி, தங்கள் தரப்புக்கு ஆதரவு திரட்டுவதில் முழுமூச்சுடன் இறங்கியிருக்கிறார். போருக்கு நடுவே, ஐரோப்பிய நாடுகளிடையே ஆதரவு திரட்டவும், ஆயுதங்கள் வழங்குமாறு கேட்கவும், ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அறிவிக்குமாறு வலியுறுத்தவும் அவருக்கு உறுதுணையாக இருப்பது தொலைபேசிதான்.
ரஷ்யப் படைகளைத் துணிச்சலுடன் உக்ரைன் மக்கள் எதிர்கொள்வதைப் பார்த்து ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்குத் தார்மிக ஆதரவு தருகிறார்கள். இதை நன்கு உணர்ந்திருக்கும் ஸெலன்ஸ்கி, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களைத் தொலைபேசியில் அழைத்துப் பேசி உதவி கோரிவருகிறார். உரிமையுடன் சுட்டிக்காட்டுவது, புகழ்ந்து பேசுவது, ஊக்கமளிப்பது, கடிந்துகொள்வது எனத் தொடர்ந்து பேசி அவர்களின் தார்மிக ஆதரவைப் பெற்றுவிடுகிறார். ட்விட்டர் மூலமும் பலருக்கு அழைப்பு விடுத்து ஆதரவும் தேடுகிறார். இதையடுத்து, ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவருவது தொடர்பான சட்ட வழிமுறைகளில் ஐரோப்பியத் தலைவர்கள் உடனடியாக இறங்கிவிடுகிறார்கள் எனச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உருசுலா வோன் டேர் லெயன், இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி, துருக்கி அதிபர் எர்டோகன், ஐநா பொதுச் செயலர் அன்டோனியோ குத்தேரஸ் என ஏராளமான தலைவர்களிடம் அவர் தொலைபேசியில் பேசியிருக்கிறார். இந்தியப் பிரதமர் மோடியையும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார். தனது தொடர் தொலைபேசி உரையாடல்கள் மூலம், வெளிப்படையாகவும், நடைமுறை சார்ந்தும் இயங்குபவர் என்றும் நற்பெயரையும் சம்பாதித்திருக்கிறார்.
இந்தப் போரின் காரணமாக, ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவும் ரஷ்யாவுடன் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் ‘ஸ்விஃப்ட்’ அமைப்பின் நிதிபரிமாற்றம் தொடர்பான தகவல் தொடர்புக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது ரஷ்யாவின் கரன்ஸியான ரூபிளின் மதிப்பில் கணிசமாகச் சரிவை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படியான அழுத்தங்களை ரஷ்யாவுக்கு அளிக்கச் செய்வதன் மூலம் அந்நாட்டை தார்மிக ரீதியாகப் பலமிழக்கச் செய்ய முயல்கிறார் ஸெலன்ஸ்கி.
ரஷ்யாவின் பெரும் படையை நீண்ட காலத்துக்குச் சமாளித்து நிற்பது என்பது பலவீனமான ராணுவக் கட்டமைப்பைக் கொண்ட உக்ரைனுக்குச் சாத்தியமல்ல என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்தச் சூழலில், தனக்கு ஆதரவாக பிற நாட்டுத் தலைவர்களைத் திரட்டுவதன் மூலம், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் புதினுக்கு ‘செக்’ வைக்க முடியும் என ஸெலன்ஸ்கி கருதுகிறார்.
“ஸெலன்ஸ்கியால் உக்ரைனைக் காப்பாற்ற முடியோ ரஷ்யாவைத் திருத்த முடியுமோ தெரியாது. ஆனால், நிச்சயம் அவர் ஐரோப்பாவில் மாற்றத்தை ஏற்படுத்திவருகிறார்” என ஓர் ஐரோப்பிய நாட்டின் உயரதிகாரி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது!