தலைப்பு செய்திகள்
நாகர்கோவில் மேயர் தேர்தல். பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக.
நாகர்கோவில் மாநகராட்சியில் திமுக கூட்டணி தனிபெரும்பான்மையுடன் வெற்றிபெற்று விட்டது. இருந்தும் 11 இடங்களை மட்டுமே பெற்றிருந்த பாஜகவும் மேயர் வேட்பாளருக்கு காய் நகர்த்தி வருகிறது. இந்நிலையில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு கொடுத்துள்ளது. மேயர் பதவியை எப்படியும் கைப்பற்றுவோம் என பாஜகவினர் நம்பிக்கையாகக் கூறிவருவது திமுகவினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் மாநகராட்சியில் மொத்தம் 52 வார்டுகள் உள்ளன. இதில் மேயர் பதவியைப்பெற 27 வார்டு உறுப்பினர்கள் தேவை. நாகர்கோவிலில் திமுக 24 வார்டுகளிலும், காங்கிரஸ் 7, மதிமுக ஒரு வார்டிலும் வென்றுள்ளது. இதன் கூட்டுத்தொகை 33 ஆகும். அதேநேரம் பாஜக 11 வார்டுகளில் வெற்றி பெற்றது. இருந்தும், பாஜக மேயர் வேட்பாளரை அறிவித்தது. இந்நிலையில் பாஜகவுக்கு, அதிமுக ஆதரவு கொடுத்துள்ளது. இதன்மூலம் பாஜக கூட்டணியின் பலம் 18 ஆக உள்ளது. இது போக சுயேச்சைகளில் இருவர் வெற்றிபெற்றனர். அவர்களில் ஒருவர் இயல்பாகவே பாஜக ஆதரவாளர். இதனால் பாஜக அணிக்கு 19 வாக்குகள் கைவசம் உள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அமைப்பு செயலாளரும், கன்னியாகுமரி எம்.எல்.ஏவுமான தளவாய்சுந்தரம், ‘நாகர்கோவில் பாஜகவின் மேயர் வேட்பாளர் மீனாதேவை அதிமுக ஆதரிக்கிறது. இதற்கு அதிமுக தலைமை ஒப்புதல் கொடுத்துவிட்டது’ என்றார். பாஜக திமுக, காங்கிரஸ் கூட்டணியில் யாருடைய வாக்கைக் கைப்பற்ற காய் நகர்த்துகிறது? பெரும்பான்மை வார்டுகளை திமுக, காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியுள்ள நிலையில் பாஜக எப்படி மேயர் சீட்டிற்கு தன்னம்பிக்கையோடு காய் நகர்த்துகிறது? என திமுகவினர் குழம்பிக் கொண்டிருக்க, 4 ஆம் தேதி அதற்கு விடை கிடைக்கும் என நமுட்டுச் சிரிப்பு சிரிக்கின்றனர் பாஜகவினர்!
நாகர்கோவிலில் தேர்தல் பரப்புரைக்கு வந்திருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கன்னியாகுமரியை நம்பித்தான் தனியாக நிற்கிறோம் என பேசியிருந்தார். இதையெல்லாம் கூட்டிக் கழித்து என்ன நடக்கப் போகிறதோ என ஆச்சர்யம் விலகாமல் காத்திருக்கின்றனர் நாகர்கோவில் மக்கள்.