BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

“யுக்ரேனை கடந்த பிறகே உயிர் வந்தது” – தாயகம் திரும்பிய தமிழக மாணவர்கள்.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலையடுத்து யுக்ரேனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்டுக் கொண்டு வரும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. `வெடிகுண்டுகள் வெடிக்கத் தொடங்கியதும் ஊர் திரும்ப முடியுமா என்ற அச்சம் இருந்தது. இந்திய தூதரக அதிகாரிகள் உதவியால் ஊர் திரும்பியுள்ளேன்’ என்கிறார், சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் ஷகீர் அபுபக்கர்.

யுக்ரேனில் நான்காவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் யுக்ரேனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் மற்றும் இந்திய மக்களை மீட்கும் பணியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. ‘ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டத்தின் மூலம் யுக்ரேனில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் உள்பட 219 இந்தியர்கள், ஏர் இந்தியா மூலம் கொண்டு வரப்பட்டனர். இவர்களில் பெரும்பாலான மாணவர்கள், செர்னிவ்சி என்ற இடத்தில் உள்ள புகோவினியன் மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர். மும்பை சத்ரபதி விமான நிலையம் வந்து இறங்கிய இவர்களை தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். இவர்களை வரவேற்க மும்பை சத்ரபதி விமான நிலையத்துக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வந்திருந்தார்.

இதில், இரண்டாவதாக ஞாயிற்றுக்கிழமையன்று டெல்லி வந்த மீட்பு விமானத்தில் 249 மாணவர்கள் வந்தனர். இவர்களில் குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் ஷகீரும் ஒருவர். இவருடன் ஐந்து தமிழ் மாணவர்கள் டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ளனர். இதில் ஷகீரின் தந்தை, லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சென்னை, கூடுவாஞ்சேரியில் பிளஸ் 2 முடித்த ஷகீர், யுக்ரேனில் மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். “ போர்ப் பதற்றம் தொடங்கியதில் இருந்தே ஊர் போய் சேருவோமா என்ற அச்சமே அதிகமாக இருந்தது” எனக் கவலையோடு பேசத் தொடங்கிய ஷகீர், கல்விச் சூழலை விவரித்தார். ` யுக்ரேனில் உள்ள புக்கோவினியன் மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து வருகிறேன். என்னோடு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் படித்து வருகின்றனர். அங்கு மொத்தமாக 20 தமிழ் மாணவர்கள் உள்ளனர். அங்கு செர்னிவ்சி (chernevtsi) என்ற இடத்தில் கல்லூரி விடுதி இருக்கிறது” என்கிறார். போர் தொடங்கியபோது உங்களுக்குப் போதிய பாதுகாப்பு கிடைத்ததா?” என்றோம். “நாங்கள் விடுதியில் பாதுகாப்புடன் இருந்தோம். அதேநேரம், 21 ஆம் தேதியன்று முதல் வெடிகுண்டு வெடித்த நேரத்தில் எங்கள் பல்கலைக்கழக மாணவர்களில் சிலர், இந்தியா திரும்புவதற்காக கீயவ் நகருக்கு சென்றிருந்தனர். அங்கு குண்டுகள் வெடிப்பதை அவர்கள் நேரில் பார்த்துள்ளனர். அதேநேரம், கீயவ் விமான நிலையத்தில் எங்கள் மாணவர்கள் 30 பேர் சிக்கியுள்ள தகவல் அவர்களுக்குத் தெரியவந்துள்ளது. அவர்களையும் அழைத்துக் கொண்டு அதே பேருந்தில் பல்கலைக்கழகம் வந்தனர். ஆனால், அவர்கள் வருவதற்கு நான்கு நாள்களாகிவிட்டன.

காரணம், கடுமையான போக்குவரத்து நெரிசலால் பத்து மணிநேரத்துக்கும் மேல் ஒரே இடத்தில் நின்றுள்ளனர். அந்த நேரத்தில் உணவு, தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டனர். அவர்கள் வந்த பிறகு, இந்திய தூதரகத்தில் இருந்து யாரெல்லாம் கிளம்ப வேண்டும் என்ற பட்டியல் வந்துவிட்டது. முதல் பயணத்தில் நான்கு பேருந்துகளும் அடுத்த பயணத்தில் நான்கு பேருந்துகளும் கிளம்பின. எங்களை பேருந்து மூலம் ருமேனியாவுக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், எல்லையை நெருங்குவதற்குள் கடும் போக்குவரத்து. எங்களால் நகர முடியவில்லை. சுமார் எட்டு கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்றோம். பின்னர், விமான நிலையம் சென்றதும் தமிழ்நாடு அரசில் இருந்து எங்களைத் தொடர்பு கொண்டனர். டெல்லியில் நாங்கள் இறங்கப் போகும் நேரத்தைக் கூறியதும், அரசின் பிரதிநிதிகள் வரவேற்றனர். அங்கிருந்து சென்னை வருவதற்கான விமான பயண டிக்கெட்டையும் தமிழ்நாடு அரசு எடுத்துக் கொடுத்தது” என்கிறார். `ருமேனியா விமான நிலையம் வருவதில் சிரமம் இருந்ததா?” என்றோம்.

“எங்கள் விடுதியில் இருந்து விமான நிலையம் 600 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. சுமார் 8 மணிநேரப் பயணம் இருந்தது. எப்படியாவது எல்லையைத் தாண்டிவிட்டால் போதும் என்ற மனநிலையில்தான் இருந்தோம். சொல்லப்போனால் ஊருக்குப் போவோமா என்ற அச்சமும் இருந்தது. தூதரகத்தில் இருந்து அழைப்பு வரும் வரையில் விடுதியிலேயேதான் இருந்தோம். எங்களுக்குப் பெரிதாக பாதிப்பு இல்லை. ஆனால், கீவ் மற்றும் கார்கீவில் இருந்த எங்கள் மாணவர்கள், பதுங்கு குழிகளில் இருந்ததாக தெரிவித்தனர். அங்கு சாப்பாடு, தண்ணீர் கிடைப்பதற்கு சிரமப்பட்டுள்ளனர். கழிப்பிடங்களைக் கூட பயன்படுத்த முடியவில்லை என வேதனைப்பட்டனர்” என்கிறார்.

“போர் நடவடிக்கைகள் தொடங்கியபோது உணவுக்கு சிரமம் இருந்ததா?” என்றோம்.

`போர் தொடங்கியதும், `எத்தனை நாள் கடை இருக்கும் எனத் தெரியாது. உணவுக்குத் தேவையான பொருள்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்’ என்றனர். நாங்களும் ஒரு மாதத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களை வாங்கிவிட்டோம். விடுதி நிர்வாகமும், `இது லாக்டவுன் போலத்தான் இருக்கும், கவலைப்பட வேண்டாம்’ என்றனர். மேலும், `சூழல் சரியானதும் உங்களை அழைத்துக் கொள்கிறோம். தற்போதைய சூழலில் இரண்டு வாரங்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதுவரையில் ஆன்லைனிலேயே வகுப்புகள் நடக்க உள்ளன’ எனவும் தெரிவித்துள்ளனர். மீண்டும் எப்போது யுக்ரேன் செல்வோம் எனத் தெரியவில்லை” என்கிறார்.

இதையடுத்து, பிபிசி தமிழிடம் பேசிய ஷகீரின் தந்தை அபுபக்கர், “மகன் ஊர் திரும்பியதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கடந்த ஒரு வாரமாக கடுமையான மனப்பதற்றத்தில் இருந்தோம். அங்குள்ள சூழலை அறிந்த பிறகு வீட்டில் உள்ள பெண்கள் அழுதபடியே இருந்தனர். என்ன செய்வது என்று தெரியாமல் தூதரகத்தைத் தொடர்பு கொண்டோம். முதலமைச்சரின் தனிப்பிரிவில் தொடர்பு கொண்டு பேசினோம். அவர்கள் எங்களுக்குப் பெரிதும் உதவி செய்தனர். என் மகன் ஊர் திரும்பிய பிறகுதான் உயிரே வந்தது” என்கிறார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )