BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

மக்கள் மருந்தக வார விழா – தஞ்சையில் துவக்கம்.

பிரதமரின் இந்திய மக்கள் மருந்தக திட்டத்தின் சார்பில் வெகுஜன மக்களுக்கு தரமான பொது மருந்துகள் நியாயமான விலையில் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் மருந்தகங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்கள் மருந்தகம் – சேவையும், வேலைவாய்ப்பும் என்பது இதன் மையக் கருவாகும்.

இந்திய மருத்துவப் பொதுத்துறை நிறுவனங்கள் பணியகம் என்ற அமைப்பு, பிரதம மந்திரியின் மக்கள் மருந்தகம் திட்டத்தைச் செயல்படுத்துகிறது. அனைவரும் தரமான பொது மருந்துகள் நியாயமான விலையில் கிடைக்க வழிவகை செய்தல், மருந்தகங்கள் மூலம் பொது மருந்துகளைச் சந்தைபடுத்துதல், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மருந்துகளை கொள்முதல் செய்தல் மற்றும் மருந்தகங்கள் சரியாக செயல்படுகிறதா என்பதை கண்காணித்தல் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

பிரதமரின் இந்திய மக்கள் மருந்தக திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 739 மாவட்டங்களில் 8675 மக்கள் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் 1451 மருந்துகள் மற்றும் 240 அறுவை சிகிச்சை கருவிகள் உள்ளன. மேலும், புரோட்டீன் பவுடர், மால்ட் அடிப்படையிலான உணவுப் பொருட்கள், புரோட்டின் பார், இம்யூனிட்டி பார், சானிடைசர், முகமூடிகள், குளுக்கோமீட்டர், ஆக்சிமீட்டர் போன்ற புதிய மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மக்கள் மருந்தக திட்டம் குறித்து அதிக விழிப்புணர்வை உருவாக்குவதற்காக, 4வது மக்கள் மருந்தக வாரம் இந்த ஆண்டு நாடு முழுவதும் மார்ச் 1 முதல் மார்ச் 7 வரை மக்கள் மருந்தகம் – வெகுஜன பயன்பாடு என்பதை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

தஞ்சையில் மார்ச் 1ம் தேதி மக்கள் மருந்தக திட்ட விழிப்புணர்வு நடைபயணம், மார்ச் 2ம் தேதி மகளிருக்கான கருத்தரங்கம், மார்ச் 3ம் தேதி குழந்தைகளுக்கான வினா விடை போட்டி, மார்ச் 4ம் தேதி கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம், மார்ச் 5ம் தேதி அரசு சாரா தன்னார்வ அமைப்புகளுடன் கலந்துரையாடல், மார்ச் 6ம் தேதி முதியோருக்கான மருத்துவ முகாம், மார்ச் 7ம் தேதி மக்கள் மருந்தக தினம் என பல்வேறு நிகழ்ச்சிகளை தஞ்சாவூர் அனைத்து மக்கள் மருந்தகம் சார்பில் மக்கள் மருந்தக விநியோகஸ்தர் ஸ்ரீ அம்மன் ஏஜென்சி மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் சச்சின், அரவிந்த் சாமி ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர்.

இன்று நடைபெற்ற பேரணியை இந்திய மருத்துவ கழக தேசிய ஆலோசகர் டாக்டர். வரதராஜன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் இந்திய பல் மருத்துவமனைகள் சங்க ஆலோசகர் டாக்டர் ராஜ்மோகன், ஸ்ரீ அம்மன் ஏஜென்சிஸ் உரிமையாளர் திரு. ஜெயச்சந்திரன், ரெட் கிராஸ் மாவட்ட பொருளாளர் திரு. முத்து குமார், மக்கள் மருந்தக விற்பனையாளர் பிரதீப் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்பேரணியில் பாரத் கல்லூரி, விவேகானந்தா கல்லூரி, கரந்தை கல்லூரி யூத் ரெட் கிராஸ் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )