BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள் – குவியும் சுற்றுலாவாசிகள்!

‘புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குவதால் பொதுமக்கள் வருகை அதிகரித்துள்ளது’

புதுச்சேரி அரசின் வேளாண் துறையின் சார்பில் தாவரவியல் பூங்காவில் கடந்த 1978 முதல் ஆண்டு தோறும் மலர், காய் மற்றும் கனிகள் கண்காட்சி நடத்தப்பட்டு வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக கண்காட்சி நடத்தப்படவில்லை. கடந்தாண்டு மட்டும் இக்கண்காட்சிக்கு பதில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலதுறையின் மலர் உற்பத்தி, காய்கறிச் சாகுபடி தொழில் நுட்பங்கள் சிறிய அளவில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்தாண்டு மலர் கண்காட்சியை மனதில் கொண்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 1.15 லட்சம் ரூபாய் செலவில் மலர் கண்காட்சிக்காக செடிகள் உற்பத்தி செய்யப்பட்டன. வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் மலர் கண்காட்சி நடத்தப்படும். மலர் கண்காட்சிக்கு 70 லட்சம் ரூபாய் வரை செலவாகும். நிதி நெருக்கடியில் உள்ள புதுச்சேரி அரசு மலர் கண்காட்சி பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை.

அதேபோல், கொரோனா நோய் தொற்று காரணமாக கண்காட்சி தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் மலர் கண்காட்சிக்காக தயார் செய்யப்பட்ட மலர் செடிகள் பூத்து குலுங்க தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து லாஸ்பேட்டை அசோக் நகரில் உள்ள மலர்செடிகள் மையத்தில் உருவாக்கப்பட்ட பூத்து குலுங்கும் மலர் செடிகளை தாவரவியல் பூங்காவில் காட்சிப்படுத்தும் பணியை தோட்டக்கலை பிரிவு மேற்கொண்டது. இதன் காரணமாக தாவரவியல் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களின் வருகை அதிகரித்துள்ளது. வண்ணமயமாக பூத்து குலுங்கும் மலர்களின் அருகே செல்பி எடுத்து பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

புதுச்சேரியின் சுற்றுலா பகுதிகளில் தாவரவியல் பூங்காவும் ஒன்று. கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஒரே தாவரவியல் பூங்கா என்ற பெருமையுண்டு. புதுச்சேரியில் உள்ள தாவரவியல் பூங்கா பிரெஞ்சு காரர்களால் அமைக்கப்பட்ட பாரம்பரிய பூங்காவாகும். 1826ம் ஆண்டு இப்பூங்கா நிர்மாணிக்கப்பட்டது. 1838ல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளர் பெரோட் இப்பூங்காவின் பொறுப்பு ஏற்றார். அவரது முயற்சியால் கடற்கரை காற்றால் பாதிக்காத தனித்துவம் வாய்ந்த தாவரங்கள் இங்கு சேகரிக்கப்பட்டு மரக்கன்றுகள் உருவாக்கப்பட்டு மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

புதுச்சேரியில் உள்ள பசுமை மாறா உலர் வெப்பமண்டல காடுகளின் தாவரங்கள் மட்டுமின்றி சுமார் 200 கிமீ தொலைவு சுற்று வட்டாரத்தில் எங்குமே காண முடியாத பல அரிய வகை மரங்களும் இப்பூங்காவில் உள்ளன. 22 ஏக்கரில் அமைந்துள்ள தாவரவியல் பூங்காவில் கல்மரம், சிறுவர் விளையாட்டு பகுதி, சிறுவர் ரயில்,மீன் அருங்காட்சியகம் என பல முக்கிய அம்சங்களும் உள்ளன. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )