தலைப்பு செய்திகள்
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் 52 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு.
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் 52 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு: அருங்காட்சியகம் அமைக்க முதற்கட்டமாக ரூ.17 கோடி நிதி..!!
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழாய்வில் 52 முதுமக்கள் தாழிகள் கிடைத்திருப்பதாக தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.
பொருட்களை அதே இடத்தில் காட்சிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பரம்பு பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை டெல்லி தொல்லியல்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தொல்லியல் துறையின் திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ் இரு பிரிவுகளாக நடைபெற்று வந்த பணிகளில் 3 கால கட்டங்களை உள்ளடக்கிய 52 முதுமக்கள் தாழிகள் கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.
அகழாய்வில் கிடைக்கப்பெறும் பொருட்கள் அதே இடத்தில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இதற்காக முதல்கட்டமாக 17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார். ஆதிச்சநல்லூரில் அமைக்கப்படவுள்ள அருங்காட்சியகத்தில் ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வில் கிடைக்கப்பெற்று சென்னையில் உள்ள பொருட்கள் வைக்கப்படும் என்று கூறிய அவர், வெளிநாடுகளில் உள்ள பொருட்களையும் மீட்டு வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.