BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

அமெரிக்காவில் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு தடை.

அமெரிக்காவில் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு தடை; உக்ரைன் மக்களுடன் துணை நிற்போம்: ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர்.


வாஷிங்டன்: அமெரிக்காவில் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு தடை விதித்து அதிபர் ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்துள்ளார். உக்ரைன் ராணுவமும் கடுமையாக எதிர்த்து போரிட்டு வருகிறது. 2வது பெரிய நகரமான கார்கிவ்வை கைப்பற்ற ரஷ்ய ராணுவம் இன்றுடன் 7வது நாளாக கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. கார்கிவ் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மைய சதுக்க கட்டிடத்தின் மீது ராக்கெட் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியது. இதில், இந்திய மாணவர் ஒருவர் உட்பட 11 பேர் பலியானதாக உக்ரைன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கிளஸ்டர் எனப்படும் கொத்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துகிறது.

இதுமட்டுமின்றி ஐநா தடை விதித்த வேக்கூம் வகை குண்டுகளையும் வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தி போர் குற்றங்களை புரிவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டி உள்ளார். ஆனால், இத்தகவல்களை ரஷ்யா மறுத்து வருகிறது. ரஷ்ய ராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதலால் மக்கள் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; அமெரிக்கா மற்றும் எங்களுடைய கூட்டாளி நாடுகள் நேட்டோ நாடுகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் முழு படைபலத்துடன், எங்களுடைய ஒன்று சேர்ந்த பலத்தால் பாதுகாப்போம்.

உக்ரைனின் தலைநகரை சுற்றி ராணுவ வாகனங்களை மட்டுமே புதினால் நிறுத்த முடியும். அதேநேரம் உக்ரைன் மக்களின் இதயங்களை அவரால் எப்போதும் வெல்ல முடியாது. சுதந்திர உலகின் நிலையை புதினால் எப்போதும் குறைத்து விட முடியாது. அமெரிக்காவில் உள்ள ரஷ்ய செல்வந்தர்களின் சொத்துக்களை முடக்குவோம். உக்ரைனுக்கு ராணுவம், பொருளாதாரம் போன்ற உதவிகளை வழங்கி, நட்பு நாடுகளுடன் இணைந்து அவர்களுக்கு ஆதரவாக இருப்போம். உக்ரைனுக்குள் எளிமையாக போகலாம் என்று புதின் நினைத்தார்; மாறாக, அவர் நினைத்துப் பார்க்காத வலிமையின் சுவரைச் சந்தித்தார். ஆம், அவர் உக்ரேனிய மக்களை சந்தித்தார். ரஷ்யா செய்து வரும் குற்றங்களை கண்டறிய சிறப்பு குழு உக்ரைனுக்கு அனுப்பப்படும்.

உக்ரைன் மக்களுடன் துணை நிற்போம். உக்ரைன் மீது போர் தொடுத்ததால் உலக அரங்கில் ரஷ்ய அதிபர் புதின் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார். போர்க்காலத்தில் புதின் ஆதாயம் பெறலாம்; ஆனால் நீண்ட காலத்திற்கு அவர் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்; அமெரிக்காவில் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு தடை விதித்து அதிபர் ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்துள்ளார். உக்ரைனில் உள்ள ரஷ்ய படைகளுடன் அமெரிக்க படைகள் மோதாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே ரஷ்ய விமான நிறுவனங்களுக்கான ஆதரவை நிறுத்தி வைப்பதாக அமெரிக்காவின் போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )