தலைப்பு செய்திகள்
லாரியின் சக்கரத்தில் சிக்கி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் வசித்து வரும் நடராஜன் என்பவர் சொந்தமாக சரக்குகளை ஏற்றிச் சொல்லும் வேன் வைத்து தொழில் செய்து வருகின்றார். இவருடைய சரக்கு வேனில் ஜெகதீசன் என்பவர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் தஞ்சாவூரிலிருந்து வைக்கோல் ஏற்றிக்கொண்டு கரூர் வழியாக ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் தூக்கம் வந்ததால் சரக்கு வேனை திருச்சி- கரூர் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்திவிட்டு ஏற்கனவே அங்கு நின்று கொண்டிருந்த டேங்கர் லாரியின் முன்பு ஜெகதீசன் படுத்து தூங்கிவிட்டார். இதனையடுத்து பெட்ரோல் டேங்க் லாரியின் ஓட்டுநரும் தூக்கம் வந்ததன் காரணமாக தூங்கி விட்டார்.
இதனை தொடர்ந்து டேங்கர் லாரியின் ஓட்டுனர் அதிகாலையில் லாரியை இயக்க முயன்றுள்ளார். அப்போது வண்டியின் முன் தூங்கிக் கொண்டிருந்த ஜெகதீசன் மேல் டேங்கர் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. இதில் அவர் உடல் நசுங்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நடராஜ் அங்கிருந்தவர்களின் உதவியுடன் ஜெகதீஷை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் ஜெகதீசன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டேங்கர் லாரி ஓட்டுநர் குணசேகரனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.