BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

ஆட்டம் காணும் ரஷ்யா! வர்த்தகம் முதல் வான்வெளி வரை ரஷ்யா மீது நீளும் பொருளாதாரத் தடைகள்.

 

அமெரிக்க கடன் அட்டை நிறுவனங்களான Visa Inc மற்றும் Mastercard Inc ஆகியவை பல ரஷ்ய நிதி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளன.

உக்ரைன் மீது ரஷ்யா ஆயுதப் போர் புரிந்துவரும் நிலையில், ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார யுத்தத்தை நடத்தி வருகின்றன.

கார்ப்பரேட்டுகள், எண்ணெய் நிறுவனங்கள், கிரிப்டோ பரிமாற்றங்கள், விளையாட்டு லீக்குகள் என அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் வர்த்தகம் முதல் வான்வெளி வரை ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை கடுமையாக்கியுள்ளன. இதனால் அந்நாடு மெல்ல தள்ளாட ஆரம்பித்துள்ளது.

உலகின் 11-வது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள ரஷ்யாவுக்கு டேனிஷ் ஷிப்பிங் நிறுவனமான மார்ஸ்க், சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட MSC மற்றும் பிரான்சின் CMA CGM ஆகிய கப்பல் நிறுவனங்கள் பொருட்கள் விநியோகத்தை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளன.

ஆப்பிள், கூகுள், ஃபோர்டு மற்றும் ஹர்லி டேவிட்சன் நிறுவனங்கள் ரஷ்யாவுடனான வர்த்தகத்தை துண்டித்துக் கொண்டுள்ளன.

அமெரிக்க கடன் அட்டை நிறுவனங்களான Visa Inc மற்றும் Mastercard Inc ஆகியவை பல ரஷ்ய நிதி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளன. இதன் மூலம் மட்டும் நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ரஷ்யா சந்திக்க உள்ளது.

ரஷ்யாவே சிறிதும் எதிர்பார்க்காத வகையில் SWIFT எனப்படும் உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத்தொடர்புகளுக்கான அமைப்பிலிருந்து ரஷ்யாவின் சில வங்கிகள் அகற்றப்பட்டுள்ளன. இதனால், வெளிநாட்டு வங்கிகளில் ரஷ்ய மக்கள் வர்த்தகத்தில் ஈடுபட முடியாது.

SWIFT மூலம் உலக அளவில் 200 நாடுகளில் உள்ள 11 ஆயிரம் வங்கிகளுக்கு பாதுகாப்பான தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன. அன்றாடம் பல ட்டிரில்லியன் டாலர்கள் மதிப்பிலான பணவர்த்தனைகள் குறித்த தகவல்கள் SWIFT மூலம் பகிரப்படும்.

இதுமட்டுமல்லாமல் ரஷ்யாவின் ரூபாயான ரூபிள், 35 சதவிகிதம் வரை சரிவைக் கண்டுள்ளது. இதனால் இறக்குமதிக்கான செலவு அதிகரித்து பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் போருக்கு முன்பே ரஷ்ய நாட்டில் பணவீக்கம் அதிகரித்து, அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்திருந்தது.

டாலருக்கு நிகரான ரூபிளின் மதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், ஏடிஎம்-களில் மக்கள் குவிந்து வருகின்றனர். அச்சம் காரணமாக, அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிக்கவும் மக்கள் தொடங்கியுள்ளனர்.

தற்போதைக்கு ரஷ்ய பொருளாதாரத்திற்கு கைகொடுக்கும் ஒரே ஆயுதம் எண்ணெய் ஏற்றுமதி மட்டுமே. உலகின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடான ரஷ்யாவையே ஐரோப்பிய நாடுகள் நம்பியுள்ளன. எண்ணெய் ஏற்றுமதி மூலம் தற்காலிகமாக தனது பொருளாதாரத் தேவையை ரஷ்யா பூர்த்தி செய்துகொண்டாலும், விரைவில் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகக் கூடும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )