தலைப்பு செய்திகள்
அரசுப் பணிகளில் இவர்களுக்கும் இட ஒதுக்கீடு.அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை.
இரண்டாம் நிலை காவலர்கள், சிறை வார்டன்கள், தீயணைப்புத் துறை வீரர்கள் தேர்வில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்த இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை எனக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குமாறு மத்திய – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோதும், ஏன் வழங்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு எந்தத் தடையும் இல்லை எனக் கூறிய நீதிபதி, இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வில் பங்கேற்ற மூன்றாம் பாலினத்தவர்கள் அனைவரும் ஆரம்பக்கட்ட தேர்வுகளில் தகுதி பெற்றதாக கருதி, உடற்தகுதி உள்ளிட்ட பிற தேர்வுகளில் பெண்களுக்கான சலுகைகளை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், எட்டு வாரங்களில் தேர்வு நடைமுறைகளை முடிக்க வேண்டும் எனவும் சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டதோடு, எதிர்காலத்தில் அரசுப் பணி நியமனங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு குறிப்பிட்ட சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு பரிந்துரைத்தார்.