BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

உக்ரைன் போர்: நம்பகமானதா போர்க்குற்ற விசாரணை?

உக்ரைனில் ரஷ்யா நிகழ்த்திவரும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) முழு வீச்சில் களமிறங்கியிருக்கும் நிலையில், போர்க்குற்ற விசாரணைகள் மூலம் ஒரு நாட்டுக்கு அழுத்தமோ, தண்டனையோ வழங்கப்படுவது சாத்தியம்தானா எனும் கேள்வி எழுந்திருக்கிறது.

இந்தப் போரில் ரஷ்யப் படைகள் ஏவுகணைகள், வெடிகுண்டுகள் போன்ற ஆயுதங்களுடன் கொத்து குண்டுகள், ஜெனிவா ஒப்பந்தத்தின்படி தடைசெய்யப்பட்ட வெற்றிட வெடிகுண்டு (சுற்றுப்புறத்தில் உள்ள காற்றிலிருந்து ஆக்சிஜனைப் பயன்படுத்தி அதிக வெப்ப உமிழ்வுடன் வெடிக்கக்கூடியது. வழக்கமான வெடிகுண்டுகளைவிடவும் நீண்ட நேரத்துக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடியது) போன்றவற்றையும் பயன்படுத்தி தாக்குதல் நடத்திவருகிறது. குடியிருப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள், அரசுக் கட்டிடங்கள் எனப் பல்வேறு இடங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்திவருகிறது.

பிப்ரவரி 28-ம் தேதி, இதுகுறித்து பேசியிருந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்கறிஞர் கரீம் அகமது கான் கியூசி, உக்ரைன் நிலவரம் தொடர்பாக, எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக விசாரணை நடத்த முடிவெடுத்திருப்பதாகக் கூறியிருந்தார். இது தொடர்பாக கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட 39 நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கும் நிலையில், விசாரணை விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது.

எனினும், இதற்கு முன்னர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட நாடுகள் மீதான விசாரணை எந்த அளவுக்கு நடைபெற்றிருக்கிறது என்பது முக்கியமான கேள்வி.

சித்திரவதை, பிணைக்கைதிகளாக அடைத்துவைத்தல், சட்டவிரோதமாக் கைது நடவடிக்கைகள், போர்க் கைதிகளைக் கொலை செய்தல், சொத்துக்களைச் சேதப்படுத்துதல் உள்ளிட்டவை போர்க்குற்றங்களாகக் கருதப்படுகின்றன. 1990-களில் செசன்யா பகுதிகளில் நடந்த போரில் ஏற்கெனவே இந்தக் குற்றங்களில் ரஷ்யா ஈடுபட்டிருக்கிறது.

2014-ல் கிழக்கு உக்ரைனிலும், க்ரைமியாவிலும் ரஷ்யப் படைகள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக, இதற்கு முன்னர் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்கறிஞராக இருந்த ஃபாடு பென்ஸோடா, ரஷ்யா மீது முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினார்.

இதுதொடர்பாக விவாதிப்பவர்கள் சுட்டிக்காட்டும் முக்கியமான விஷயம், போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகத் தண்டனை அறிவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதுதான். அமெரிக்கப் படைகளும், அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ-வும் ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றங்களை நிகழ்த்தியது தொடர்பாகத் தொடங்கப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை கடந்த ஆண்டு கைவிடப்பட்டதும் பலத்த சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.

அமெரிக்கப் படைகள் மீதான விசாரணைக்கு முன்னுரிமை வழங்குவதைக் கைவிட்டுவிட்டு, ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தாலிபான்கள் குறித்தும், ஐஎஸ் கோரசான் அமைப்பு குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என ஐசிசி தலைமை வழக்கறிஞர் கரீம் அகமது கான் கூறியிருந்தார். மனித உரிமை அமைப்புகள் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தன. எனினும், தனது முடிவை நியாயப்படுத்திப் பேசிய கரீம் அகமது கான், தாலிபான்களும் ஐஎஸ் அமைப்பினரும்தான் மிக மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்டனர் என வாதிட்டார்.

கடந்த 20 ஆண்டுகளில் 10 பேர்தான் போர்க்குற்ற விசாரணையின் கீழ் தண்டனை அறிவிக்கப்பட்டவர்கள் என்பதும் இன்னொரு முக்கிய விஷயம்.

இதுபோன்ற முன்னுதாரணங்களை வைத்துப் பார்க்கும்போது ரஷ்யா மீதான போர்க் குற்ற விசாரணை முழு வீச்சில் நடக்குமா, போர்க் குற்றங்கள் நடந்திருப்பதற்கான சான்றுகள் கிடைக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனையளிக்கப்படுமா என்பதெல்லாம் பில்லியன் ரூபிள் கேள்விகளாகவே எஞ்சி நிற்கின்றன!

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )