தலைப்பு செய்திகள்
துப்பாக்கியால் சுட்டு சிஐஎஸ்எப் வீரர் தற்கொலை: சென்னை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி.
சென்னை விமான நிலைய கழிப்பறையில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர் யஸ்பால் (26). திருமணம் ஆகாத யஸ்பால் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை விமான நிலையத்தில் உள்ள தொழிற்பாதுகாப்பு படை குடியிருப்பில் தங்கி சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு பணிக்கு வந்த யஸ்பால் விமான நிலைய வெளிநாட்டு முனையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். பின்னர் 7 மணியளவில் விமான நிலைய கழிப்பறைக்கு சென்ற யஸ்பால் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் நெத்தி பொட்டில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த விமான நிலைய துப்புரவு பணியாளர்கள் கழிவறையில் பாதுகாப்பு படை வீரர் யஸ்பால் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவத்தனர்
உடனே சம்பவ இடத்திற்கு சென்ற பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்த யஸ்பால் உடலை மீட்டு மீனம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த போலீஸார் யஸ்பால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், யஸ்பால் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பணிசுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமான நிலையத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர் யஸ்பால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.