தலைப்பு செய்திகள்
பெண்கள் மயமாகிய மாநகராட்சிகள்.. சென்னை, கோவை.. திமுக அமர்க்களம் !!
தமிழகம் முழுவதும் மாநகராட்சி மேயர்கள் பதவியேற்பு விழா காலை முதல் ரிப்பன் மாளிகையில் நடைபெற்று வருகிறது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகளில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற மேயர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
சென்னை மாநகராட்சி மேயராக திமுக வேட்பாளர் பிரியா ராஜன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுகவின் பிரியா மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவித்தார். இதையடுத்து சென்னை மாநகராட்சியின் 49வது மேயராக பிரியா ராஜன் பொறுப்பேற்றார்.
தொடர்ந்து சிவப்பு நிற அங்கி அணிந்து மேயர் இருக்கையில் அமர்ந்தார் பிரியா. அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் மயிலை எம்எல்ஏ த.வேலு ஆகியோர் இணைந்து பிரியா ராஜனுக்கு செங்கோல் வழங்கினர். அதேபோல கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ள நிலையில் 96 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது . இந்த சூழலில் கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக கல்பனா ஆனந்தகுமார் நேற்று அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் இன்று காலையில் மேயர் வேட்பாளருக்கு கல்பனா மட்டுமே மனுதாக்கல் செய்த நிலையில்,, அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மிசா காலத்தில் சிறைக்கு சென்ற கட்சி தொண்டர் பழனிசாமியின் மருமகளான இவர், 19வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் , பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள கல்பனா மணியகாரம்பாளையம் ஸ்டேஷனரி மற்றும் இ -சேவை மையத்தை நடத்தி வந்தவர் . திமுகவின் அடிமட்ட விசுவாசி, இதுவரை எந்த பதவியும் வகிக்காத நிலையில், கோவையின் முதல் பெண் மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கல்பனா ஆனந்தகுமார். குடும்பப் பின்னணி, கட்சிக்காக அவரது குடும்பம் ஆற்றிய பணிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் கல்பனா.
சாமானிய குடும்பத்தில் இருந்து வந்தாலும் கட்சிக்காக உழைத்தால் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையை தற்போது திமுக இவர் மூலமாக விதைத்துள்ளது. காரில் செல்லும் வசதி இல்லை ,பஸ்ஸில் சென்னைக்கு பயணம், வாடகை வீடு என்ற பின்னணியை கொண்ட கல்பனா தற்போது கோவை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ளது திமுக அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மேயராக பொறுப்பேற்ற கல்பனாவுக்கு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செங்கோல் வழங்கி சிறப்பித்தார்.