தலைப்பு செய்திகள்
நிலையான எரிசக்தி ஆதாரங்களில் இருந்து மட்டுமே நிலையான வளர்ச்சி சாத்தியம் – பிரதமர் மோடி பேச்சு.
வரும் ஆண்டுகளில், இந்தியாவின் எரிசக்தி தேவைகள் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகிற்காக இந்தியாவில் உருவாக்குவோம் என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய நிலைமை குறித்து பிரதமர் மோடி இன்று இணையதளம் மூலம் பேசியதாவது:
வரும் ஆண்டுகளில், இந்தியாவின் எரிசக்தி தேவைகள் அதிகரிக்கும். எனவே, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு நாம் மாற வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் 15 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்க உதவும் வகையில் நாம் சொந்தமாக சூரிய மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இது தனித்துவமாக மட்டும் இல்லாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.
2030 ஆண்டிற்குள், இந்தியா தனது எரிசக்தி ஆற்றலில் 50 சதவீதத்தை புதை படிவமற்ற எரிபொருளிலிருந்து பிரித்தெடுக்கும் இலக்கை நிர்ணயித்துள்ளது. மேலும் நிலையான நடைமுறைகளுக்கு மாறுவதற்கு இது வாய்ப்பாக இருக்கும். ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் தனியார் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
நடப்பாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், நமது எரிசக்தி ஆற்றல் திறன்களை அளவிடக் கூடிய கொள்கையில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் செயல் திறனை மேம்படுத்த நிலையான மற்றும் புதுமையான வணிக மாதிரிகளை நாம் உருவாக்க வேண்டும்.
நிலையான வளர்ச்சிக்கான ஆற்றல் என்ற இன்றைய கருப்பொருள் நமது பாரம்பரிய அறிவால் ஈர்க்கப்படுவது மட்டுமல்லாமல், நாட்டின் எதிர் காலத்தையும் வழிநடத்தும்.
நிலையான எரிசக்தி ஆதாரங்களில் இருந்து மட்டுமே நிலையான வளர்ச்சி சாத்தியம் என்பது இந்தியாவின் தொலை நோக்குப் பார்வையாக உள்ளது. இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.