தலைப்பு செய்திகள்
பீகாரில் வீட்டில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்து – 7 பேர் பரிதாபமாக பலி.
பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டத்திலுள்ள கஜ்வாலிஜாக் பகுதியில் உள்ள குடியிருப்பில் நேற்று நள்ளிரவில், பயங்கர வெடி சப்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
குடியிருப்பு பகுதியிலுள்ள ஒரு வீட்டை சேர்ந்த குடும்பத்தினர் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட போது எதிர்பாராத விதமாக வெடிவிபத்து ஏற்பட்டதாகவும், இதில் அருகிலுள்ள வீடுகளும் இடிந்து தரைமட்டமானதாகவும், பகல்பூர் மாவட்ட நீதிபதி, சுப்ரத் குமார் சென் தெரிவித்துள்ளார்.
வெடிவிபத்து நடைபெற்ற இடத்தில் ஏராளமான வீடுகள் இடிந்து சேதமாகியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட்டுள்ளனர்.