தலைப்பு செய்திகள்
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகை ரோஜா கொடுத்த அன்பு பரிசு!
ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற உறுப்பினரும், நடிகையுமான ரோஜா சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரோஜா கூறியதாவது, தமிழக எல்லை பகுதியில் உள்ள நகரி தொகுதியில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து முதல்வரிடம் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக தமிழக எல்லை பகுதியில் உள்ள பள்ளிகளில் தமிழ் வழி வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் தேவைப்படுகிறது, பாடப்புத்தகங்களை வழங்குவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
விஜயபுரம் மண்டலத்தில் ஆந்திர அரசு 5600 ஏக்கர் APISC கையகப்படுத்தி உள்ளது. நெடுபுரம் முதல் அரக்கோணம் வரை சாலை அமைக்க தமிழகத்திலிருந்து 9 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இது தொடர்பாக முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம், சம்மந்தபட்ட துறையோடு பேசி முடிவு தெரிவிப்பதாக முதல்வர் தெரிவித்தார்.
தென்னிந்திய நெசவாளர் சங்க தலைவராக ஆர்.கே.செல்வமணி உள்ளார். தமிழக – ஆந்திர எல்லை பகுதிகளில் நெசவு தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். கொரோனா காலத்தில் வேலைவாய்ப்புகள் இல்லாமல் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால், தமிழகமும் ஆந்திர பகுதியில் உள்ள நெசவாளர்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.
இதனிடையே, பட்டுத் துணியில் நெய்யப்பட்ட புகைப்படத்தை நடிகை ரோஜா முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வழங்கினார். முன்னதாக இந்த பட்டுத் துணியை செய்தியாளர்களிடம் ரோஜா காண்பித்தார்.