தலைப்பு செய்திகள்
கோவில்பட்டி கழுகாசலமூர்த்தி கோயிலில் வேல் குத்தி காவடி மற்றும் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன்.
கோவில்பட்டி அருகேயுள்ள கழுகாசலமூர்த்தி கோயிலில் மாசி மகத் திருவிழாவையட்டி பக்தர்கள் 6 அடி நீள அலகு வேல் குத்தி காவடி மற்றும் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயிலில் மாசி மகத் திருவிழாவையட்டி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 6 மணிக்கு மேல் திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காளசாந்தி பூஜைகள் நடைபெற்றது.
காலை 10.30 மணிக்கு மேல் தூத்துக்குடி மாவட்டம் மதுரை மாவட்டம்,விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம், சிவகாசி, தேனி மாவட்டம், கம்பம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்திலிருந்து, சுற்றுவட்டார பக்தர்கள் பாத யாத்திரையாக சென்று 100க்கும் மேற்பட்டோர் பால்குடங்களும், 6 அடி நீள அலகு வேல் குத்தியும், காவடி எடுத்தும், மலையைச் சுற்றி கிரிவலம் வந்து கழுகாசலமூர்த்திக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.இதைத் தொடர்ந்து 12 மணிக்கு மேல் சிறப்பு ஹோமமும், அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு உச்சி காலப் பூஜையும் நடந்தது. இரவு 10 மணிக்கு பூஞ்சப்பர மயில் வாகனத்தில் கழுகாசலமூர்த்தி வள்ளி தெய்வானையுடன் முக்கிய வீதிகளில் ரதவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாட்டினை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் செய்திருந்தனர்.