திண்டுக்கல், 3 பள்ளிகளில் நடைபெற்ற விழாவில் 249 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்சத்திரம் பகுதிகளில் உள்ள 3 பள்ளிகளில் நடைபெற்ற விழாவில் 249 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகரம் பேரூராட்சி, முருநெல்லிக்கோட்டை ஊராட்சி, சுள்ளெறும்பு நால்ரோடு, எம்.அம்மாபட்டி ஊராட்சி, கொண்டமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா அந்தந்த பள்ளிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(19.09.2022) நடைபெற்றது.

விழாவில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் கலந்துகொண்டு, அகரம் பேரூராட்சியில் அகரம் மேல்நிலைப்பள்ளியில் 145 மாணவ, மாணவிகளுக்கும், முருநெல்லிக்கோட்டை ஊராட்சி, சுள்ளெறும்பு நால்ரோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 65 மாணவ, மாணவிகளுக்கும், எம்.அம்மாபட்டி ஊராட்சி, கொட்டமநாயக்கன்பட்டி கள்ளர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 39 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 249 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவற்றை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக கல்வித்துறைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்ததுவதற்காக நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசு பள்ளிகளில் படித்து, உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மூவலுார் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள்.
அரசு தொடக்கப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள்.

ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் அரசு பள்ளிகளில் படித்து மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டில் சேரும் அனைத்து மாணவ, மாணவிகளின் மருத்துவ கல்விச் செலவை எனது சொந்த செலவில் நான் ஏற்றுக்கொள்வேன்.
அரசு பள்ளிகளில் படித்து உயர் பதவிகளை அதிக நபர்கள் பெற்றுள்ளனர். நீங்களும் சிறப்பாக கல்வி பயின்று உயர் பதவிகளை அடைய வேண்டும்.
ஆசிரியர்களும் பின்தங்கிய பகுதிகளில் இருந்து வரக்கூடிய ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான கல்வியை வழங்கிட வேண்டும் என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

முன்னதாக மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களின் சொந்த நிதியில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் அகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தினை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.பிரேம்குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அ.நாசருதீன், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தலைவர் திரு.சிவகுருசாமி, பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
