திருச்சியில் கள்ளத் துப்பாக்கி தோட்டாக்களுடன் வாலிபர் கைது.

உப்பிலியபுரம் அருகே கள்ளத் துப்பாக்கி தோட்டாக்களுடன் வாலிபர் கைது.
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் மாராடி தேவேந்திரகுல வேளாளர் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 30). இவர் அந்த பகுதியில் உள்ள ஜெயதேவன் என்பவரது தோட்டத்தில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பண்ணை வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சக்திவேல் உரிமம் இல்லாமல் கள்ளத் துப்பாக்கி வைத்திருப்பதாக உப்பிலியபுரம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் மோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் உப்பிலியபுரம் போலீசில் புகார் செய்தார்.
தகவல் அறிந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் ஜெயதேவன் பண்ணைக்கு சென்று சோதனையிட்டனர்.
அப்போது தோட்டத்து வீட்டில் நாட்டுத் துப்பாக்கியை சக்திவேல் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 100 கிராம் வெடி மருந்து மற்றும் 30 தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டன. பின்னர் ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சக்திவேலை போலீசார் கைது செய்தனர்.
இவர் இந்த துப்பாக்கியை எங்கு வாங்கினார்? எதற்காக வாங்கினார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.