திருச்சி
திருச்சி மாவட்டத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனையில் ஆளும் கட்சியினர் அராஜகம்- அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பரஞ்சோதி பரபரப்பு புகார்.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிடுவோருக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று மாலை 5மணியுடன் முடிவடைந்தது.
இன்று அந்தந்த தேர்தல் அலுவலகங்களில் மனுக்கள் பரிசீலனை நடந்து வருகிறது.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்குட்பட்ட
10வது வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.கே. சாமி என்கிற கந்தசாமியின் வேட்பு மனு இன்று நிராகரிப்பு செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பான தகவல் அறிந்ததும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி உடனடியாக அங்கு சென்று அதிகாரிகளிடம் தள்ளுபடிக்கான காரணம் கேட்டறிந்தார்.
பின்னர் பரஞ்ஜோதி கூறுகையில் துறையூர் நகராட்சி அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் அதிகாரி காலையில் அறிவித்தார். அதன் பின்னர் தி.மு.க.வினர் அங்கு வந்து அந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என கூறி அராஜகத்தில் ஈடுபட்டதால் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்து உள்ளார்.
தமிழகம் முழுவதும் இதுபோன்று தி.மு.க.வினர் அராஜகம் செய்து வருகிறார்கள். தி.மு.க.வினரின் இந்த அநீதியான செயலுக்கு அதிகாரிகள் துணை போகக்கூடாது.
தேர்தலை நியாயமான முறையில் நடத்த அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்றால் அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்டித்து நீதிமன்றத்தை நாடுவோம் என தெரிவித்தார்.