திருவள்ளூர் அருகே பழமை வாய்ந்த ஶ்ரீ கங்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் பெற்றனர்.

திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு இரட்டை குளம் அருகே அமைந்துள்ளது பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் கோவிலை புதிதாக ராஜ கோபுரத்துடன் புதுப்பித்து அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மனுக்கும், ஸ்ரீ பால் முனீஸ்வரருக்கும், மற்றும் ஸ்ரீ நாகாத்தம்மனுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் நான்கு கால யாகசாலை பூஜை சிவாச்சாரியார்களால் , மஹா கணபதி ஹோமம், மஹாலெட்சுமி ஹோமம், நவக்ரஹ ஹோமம், உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு நிறைவாக மஹா பூர்ணாஹுதி தீபாரதனையை அடுத்து, கலச புறப்பாடு நடைபெற்றது. புனித தீர்த்தங்கள் கொண்ட குடங்களை எடுத்து வேத மந்திரங்கள் முழங்க கோவிலை வலம் வந்து சிவாச்சாரியார்கள், ஆர்.டி.பாலாஜி முன்னிலையில் அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தினை நடத்தி வைத்தனர்.
அதனை தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தப்பட்டது, புனிதநீர் தெளிக்கும்போது ஓம் சக்தி மகா சக்தி என கோஷங்கள்எழுப்பி பக்தர்கள் அம்மனை வழிபாடு செய்தனர். இதனை தொடர்ந்து ஆர்.டி.பாலாஜி, நாகப்பன், இரா.வாசு, டி.என்.பத்மநாபன், பாண்டியம்மாள், ராமச்சந்திரன், எஸ்.வாசு, எம்.ஆர்.மகேந்திரன், நாராயணசாமி, ஜெயபிரகாஷ், கனகராஜ், கோபி, சம்மந்தம், மணிரத்தினம், நந்தாரெட்டி உள்ளிட்ட விழா குழுவினர் பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் அன்னதானம் வழங்கினர். இந்த விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் உட்பட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், ஆன்மிகப் பெரியோர்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.