நண்பர்களிடம் விளையாட்டாக பேசிக் கொண்டிருந்த பிளஸ்1 மாணவன், வீடு திரும்பியதும் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை.
நண்பர்களிடம் விளையாட்டாக பேசிக் கொண்டிருந்த பிளஸ்1 மாணவன், வீடு திரும்பியதும் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை.

நண்பர்களிடம் விளையாட்டாக பேசிக் கொண்டிருந்த பிளஸ்1 மாணவன், வீடு திரும்பியதும் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆலந்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் பிளஸ்1 படித்து வந்த மாணவர் விஷ்வா. இவருக்கு வயது 17. இவர் சென்னை ஆலந்தூர் மடுவின்கரை 1வது தெருவைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஜெகநாதன்.
எப்போதும் போல பள்ளி முடிந்து நேற்று மாலை வீடு திரும்பிய விஷ்வா, குளிக்கப் போகிறேன் என்று சொல்லி விட்டு, குளியலறைக்கு சென்றிருக்கிறார். நீண்ட நேரமாகியும் விஷ்வா வெளியில் வராததால், சந்தேகமடைந்த பெற்றோர் கதவை தட்டி விஷ்வாவை சீக்கிரமாக வெளியே வரும்படி கூறி இருக்கின்றனர். ஆனால் இவர்களின் குரலுக்கு எந்த பதிலும் வராததால் அவர்களின் சந்தேகம் அதிகமாகியது. இதனால் குளியலறை கதவை உடைத்த பெற்றோர் உள்ளே சென்று பார்த்த போது உயிரையே உலுக்கிப் போடும் அளவுக்கு அவர்களது மகன் விஷ்வா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். விஷ்வாவின் உடலை பார்த்த பெற்றோர் கதறி அழுது துடித்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் பரங்கிமலை ஆய்வாளர் ஜெர்ரி தலைமையிலான போலீசார் பிளஸ்1 மாணவன் ஜெகநாதனின் வீட்டிற்கு விரைந்து வந்தனர். விஷ்வாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த முதல் கட்ட விசாரணையில், ‘‘விஷ்வா தனது நண்பர்களுடன் சம்பவத்தன்று மாலை விளையாட்டாக பேசிக் கொண்டு இருந்திருக்கிறார். அப்போது ‘‘நான் செத்தா நீங்க என்னடா பண்ணுவீங்க?’’ என்று கேட்டிருக்கிறார். இதன் விபரீதம் தெரியாத நண்பர்களோ, ‘‘நல்லா டான்ஸ் ஆடுவோம்டா’’ என்று பதில் அளித்துள்ளார்கள்’’ என்று தெரிய வந்துள்ளது.
இதன்படி பார்த்தால், ஏற்கனவே விஷ்வா தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருந்ததாக தெரிகிறது. அவருக்கு தற்கொலை செய்து கொள்ளும்படியான எண்ணம் ஏன் வந்தது? இதற்கான பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்க போலீசார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
பிளஸ்1 மாணவன் விஷ்வாவின் திடீர் தற்கொலை அவரது பெற்றோர், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் மற்றும் நண்பர்களை உலுக்கி போட்டுள்ளது.
தற்கொலை தீர்வல்ல…
பிரச்சனைகள் இல்லாத மனிதர்கள் என்று இந்த உலகில் எவருமே கிடையாது. அவரவர்களுக்கு அவர்களுடைய பிரச்சனை பெரிது. விலைமதிப்பில்லா உயிரை மாய்த்து கொள்வது தற்கொலைக்கு தீர்வு கிடையாது. உங்கள் பெற்றோர்களிடமோ, உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ, ஆசிரியர்களிடமோ மனம் விட்டு பேசுங்கள். எல்லா பிரச்சனைகளுக்கும் நிச்சயம் தீர்வுகள் உண்டு. சாவியை தயாரிக்காமல் இறைவன் ஒரு போதும் பூட்டுக்களை மட்டுமே படைப்பதில்லை. தற்கொலை எண்ணம் வந்தால், உரிய ஆலோசனை பெற மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு இலவச ஆலோசனைகளைச் சொல்ல அவர்கள் காத்திருக்கிறார்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
