பாலூர் ஊராட்சி மன்ற தலைவர் : 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு

பேரணாம்பட்டு பாலூர் ஊராட்சி மன்ற தலைவர் கோமதியின் தில்லாலங்கடி வேலைகள்: 100 நாள் வேலையில் ஏகப்பட்ட பணம் சுருட்டல்- கலெக்டர் சுப்புலட்சுமி நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பாரா ?
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் ,பாலூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கோமதி. துணைத் தலைவராக ஜீவிதா என்பவர் இருந்து வருகிறார். கோமதி என்று ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்று கொண்டாரோ அன்றிலிருந்து இன்று வரை கோமதி செய்யும் தவறுகளுக்கு அளவே இல்லை.
ஊராட்சி மன்றத்தில் எந்த ஒரு பணி செய்தாலோ எந்த ஒரு நிகழ்ச்சிகள் நடந்தாலும் ஊராட்சி மன்ற துணைத் தலைவரை வைத்துக்கொண்டு தான் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் .ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜீவிதாவை மதிப்பதே இல்லை என்றும், எந்த ஒரு பணியையும் துணைத் தலைவர் ஜீவிதாவுக்கு தெரியப்படுத்தாமலேயே தன்னிச்சையாக செயல்படுவதாகவும்,
இன்னும் வெளிப்படையாக சொல்லப்போனால் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்று கேவலமான எண்ணத்துடன் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி செயல்படுவதாகவும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜீவிதாவை அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக ஊராட்சி மன்ற தலைவர் கோமதி ஜீவிதாவை தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும் இப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி, பாலூர் ஊராட்சியில் பணிதளப் பொறுப்பில் பணியாற்றி வந்த மணி என்பவருக்கு உடல் நலம் குன்றி மூன்று மாதங்களாக மணி சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனால் பணித்தள பொறுப்பாளர் பதவிக்கு எலிமா என்பவர் தான் அமர்த்தி இருக்கப்பட வேண்டும்.
ஆனால் கோமதி துணைத் தலைவர் ஜீவிதாவையும் கேட்காமல் பெரும்பாலான ஊராட்சி மன்ற உறுப்பினர்களையும் கேட்காமல் தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் தனது உறவுக்கார பெண்ணான ஆர்த்தி என்பவரை பணித்தள பொறுப்பாளராக நியமனம் செய்துள்ளார் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி.
மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தனது மகள்கள், மருமகன்கள், உறவினர்கள் என்று வேலைகளை வழங்கி அதிலும் தனது அதிகார துஷ்பிரயோக வேலையை செய்துள்ளார் கோமதி. 100 நாள் வேலையில் வேலைக்கே வராத பத்மாவதி, ஸ்ரீதேவி உள்ளிட்ட நான்கு பேர்களை வேலை செய்ததாக பொய்யான ஒரு கணக்கை எழுதி இதுவரையிலும் தமிழக அரசின் பணத்தை ஊராட்சி மன்ற தலைவர் கோமதி ஏப்பம் விட்டுள்ளார் என்றும் இப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த தவறுகளை புதியதாக பொறுப்பேற்றுள்ள பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமாரும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உலகநாதனும் நேரில் ஆய்வு செய்து தீர விசாரித்து தவறு என தெரியவரும் பட்சத்தில் தமிழக அரசின் பணத்திலும், ஊரார்களின் பணத்தில் உடலை வளர்க்கும் பாலூர் ஊராட்சி தலைவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே பாலூர் பகுதி மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
