பொதுமக்கள் கோரிக்கை மனு தொடர்பாக தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் கள ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோயில் கிராமம், அம்பேத்கார் நகரில் வசித்து வரும் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்துவருகின்றனர்.

விவசாயக் கூலி வேலை செய்து வரும் இவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளதாகவும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டையானது முன்னுரிமையற்ற குடும்ப அட்டையாக உள்ளதால் பிரதம மந்திரியின் இலவச அரிசி மற்றும் அரசின் நலத்திட்டங்கள் கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளதாகவும் அதனை முன்னுரிமை உள்ள குடும்ப அட்டையாக மாற்றம் செய்து தரக்கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதாவிடம் மனு அளித்திருந்தனர்.

அதனஅடிப்படையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவின் பேரில் தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு அம்பேத்கர் நகரில் கள ஆய்வு செய்தார். வட்ட வழங்கல் அலுவலர் பாபு கூறுகையில் மனு அளித்துள்ள பெரும்பான்மையானோர் கூலி வேலை செய்து, ஏழ்மை நிலையில் உள்ளது தெரிய வருகிறது. தகுதியான நபர்களுக்கு அவருடைய குடும்ப அட்டையினை முன்னுரிமை குடும்ப அட்டையாக மாற்றம் செய்திட மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலருக்கு முன்மொழிவு அனுப்பி வைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கள ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் க.தி.விஸ்வநாதன் மற்றும் அங்காடி விற்பனையாளர் கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
