BREAKING NEWS

“மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனே நீ வாழும் நாளும்

“மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனே நீ வாழும் நாளும்

“மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே
மனனே நீ வாழும் நாளும்
தடுத்தாட்டித் தருமனார் தமர் செக்கில்
இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
கடுத்தாடும் கரதலத்தில் தமருகமும்
எரி அகலும் கரிய பாம்பும்
பிடித்தாடிப் புலியூர்ச் சிற்றம்பலத்து
எம்பெருமானைப் பெற்றாம் அன்றே.”
——(சுந்தரர் தேவாரம் : 01.090.01)

பொருளுரை : மனமே, நீ குஞ்சித்து ஆடுகின்ற தனது திருவடிக்குச் செய்யும் தொண்டின்கண் வாழாமல் உண்டு உடுத்தே வாழும் நாள்களிலும், உன்னை அவ்வாறே சென்று கெடாதவாறு தடுத்து, தனது இச்சைவழி நடாத்தி, பின்பு நீ முன்செய்த பாவத்தின்பொருட்டு உன்னைக் கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது அதனையும் தடுத்து ஆட்கொள்பவனாகிய, கையில் தமருகத்தையும், நெருப்பு எரிகின்ற தகழியையும், சினந்து ஆடுகின்ற கரிய பாம்பையும் பிடித்துக்கொண்டு ஆடுகின்ற, பெரும்பற்றப் புலியூரில் திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம்பெருமானை அடைந்து விட்டோமன்றே; இனி நாம் பெறவேண்டுவது யாது!

சுவாமிகள் திருமுதுகுன்றம் பணிந்து “மெய்யை முற்றப் பொடிப்பூசி” என்னும் திருப்பதிகம் பாடிப் பன்னிரண்டாயிரம் பொன் பெற்று, இப்பொன் எல்லாம் ஆரூரிலுள்ளார் எல்லோரும் வியக்குமாறு பெற அருள் செய்ய வேண்டும் என்று விண்ணப்பித்தார். பெருமானும் மணிமுத்தாற்றிலிட்டு ஆரூர்க் குளத்தில் கொள்க என்று அருளினார். நம்பியாரூரரும் அப்பொன்னில் மாற்றறிவதற்காகச் சிறிது வெட்டி எடுத்துக்கொண்டு ஆற்று நீரில் பொற்றிரளைப் போட்டு, அன்று என்னை வலிந்து ஆட்கொண்ட அருளை இதில் அறிவேன் என்று சொல்லித் தில்லையை வணங்கும் விருப்பினராய்ப் பல பதிகளையும் வணங்கிக்கொண்டு, அத்தலத்தையடைந்து கூத்தப் பெருமானைக் கண்டு, ஆடிய திருவடிகளை வணங்கிப் பாடியருளியது இத்திருப்பதிகம். இத்திருப்பதிகம் தில்லையில் கூத்தப் பெருமானது திருக்கூத்தினை வணங்கப்பெற்ற பேற்றினது அருமையை நினைந்துருகி நெஞ்சொடு உருகி அருளிச்செய்தது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )