BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

 

தஞ்சை அருகே போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு. மது பாட்டில்கள் மற்றும் கார் பறிமுதல் ஆறு பேர் கைது.

 

தஞ்சை அருகே துலுக்கம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலி மதுபானங்கள் விற்கப்படுவதாக தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ், தலைமைக் காவலர் உமா சங்கர், காவலர்கள் கவுதமன், அருண்மொழி வர்மன், அழகு சுந்தரம், நவீன், சுஜித் மற்றும் போலீஸார் இன்று துலுக்கம்பட்டி பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் துலுக்கம்பட்டியில் ஒரு போலி மதுபான ஆலை சட்டவிரோதமாக இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த குடோனுக்குள் போலீசார் நுழைந்தனர். அப்போது அங்கு இருந்த 6 பேர் தப்பி ஓட முயன்றனர். சுதாரித்துக்கொண்ட போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், தஞ்சை பொட்டுவாசாவடியை சேர்ந்த மெல்வின் சகாயராஜ் என்பவர் கடந்த 4 மாதமாக போலி மதுபான ஆலை நடத்தி வந்ததும், இதற்காக புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மதுபானம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை கொண்டு வந்து மதுபானங்கள் தயாரித்து அதனை போலி ஸ்டிக்கர்களை ஒட்டி வெளியே கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இந்தப் போலி மதுபான ஆலையில் அறிவழகன், அருண்குமார், முத்துக்குமார் ,பழனி, பாபு ஆகியோர் வேலை பார்த்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆலையில் இருந்து 650 மது பாட்டில்கள், 2000 காலி மது பாட்டில்கள், 2 மூட்டைகளில் மதுபாட்டில் மூடிகள், பிளாஸ்டிக் கேன்கள், மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள், டாட்டா இன்டிகா கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து போலி மதுபான ஆலை கடத்தி வந்த மெல்வின் சகாயராஜ், அங்கு வேலை பார்த்த அறிவழகன், அருண்குமார் ,முத்துக்குமார், பழனி, பாபு ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 6 பேரும் திருட்டு, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் போலி மதுபான ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )