BREAKING NEWS

முக்கிய செய்திகள்

மூன்றரை மணி நேரத்தில் மும்பையிலிருந்து நாக்பூர்: விரைவில் அறிமுகமாகிறது புல்லட் ரயில்!

மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் அதிவிரைவாகச் செல்லும் புல்லட் ரயில், விரைவில் அறிமுகமாகவிருக்கிறது. இந்தத் தகவலை ரயில்வே இணையமைச்சர் ராவ்சாஹேப் தாதாரவ் தான்வே தெரிவித்திருக்கிறார். தற்சமயம், மும்பையிலிருந்து நாக்பூருக்கு ரயிலில் செல்ல 12 மணி நேரம் ஆகிறது. புல்லட் ரயிலில் மூன்றரை மணி நேரத்தில் சென்றுவிட முடியும்.

இதுதொடர்பாக, நேற்று முன்தினம் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ராவ்சாஹேப் தாதாரவ் தான்வே, புல்லட் ரயில் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை இந்த மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தயாராகிவிடும் என்று குறிப்பிட்டிருக்கிறார். 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாகிவரும் திட்டம் இது.

4 மணி நேரத்தில் 766 கிலோமீட்டர் தொலைவைக் கடக்கும் புல்லட் ரயில் திட்டத்துடன், சம்ருதி எக்ஸ்ப்ரஸ்வே ரயில் பாதைத் திட்டப் பணிகளும் நடைபெற்றுவருகின்றன. புல்லட் ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏழு அதிவேக ரயில் பாதைத் திட்டப் பணிகளும் நடைபெற்றுவருகின்றன என ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், பிப்ரவரி 11-ல் மாநிலங்களவையில் அறிவித்தார்.

இதற்காக 70 சதவீத நிலங்கள் ரயில்வே துறையால் கையகப்படுத்தப்பட்டிருப்பதாகவும், மீதம் உள்ள 30 சதவீத நிலங்கள் தனியாரிடமிருந்து பெறப்படவிருப்பதாகவும் ராவ்சாஹேப் தாதாரவ் தான்வே கூறியிருக்கிறார். இந்தத் திட்டம் முழுமையும் மேம்பாலப் பாதை வழியாகச் செயல்படுத்தப்படுவதால், விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்றும் அவர் உறுதியளித்திருக்கிறார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )