முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! தென்காசி வாலிபர் கைது!!
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! தென்காசி வாலிபர் கைது!!

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று நள்ளிரவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் செயல்பட்டு வரும் தனிப்பிரிவு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இவரை போலீசார் விரைந்து தேடி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் உள்ள தனிப்பிரிவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அதில், சொத்து தகராறில் போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதால், முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன் என்று கூறிவிட்டு உடனே போன் இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதனால் அதிர்ந்து போன வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் முதல்வர் வீட்டில் தீவிர சோதனை நடத்தினர். எங்கு தேடியும் வெடிகுண்டு கிடைக்காததால் அது வெறும் புரளி என்பதை உணர்ந்தனர். இதைத்தொடர்ந்து வெடிகுண்டு குறித்து போனில் மிரட்டல் விடுத்த நபர் குறித்து தேனாம்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி என்ற பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜ் என்பதும், இந்த போன் அழைப்பை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் அம்பாசமுத்திரம் ரெயில் நிலையத்தில் டிரக்மேனாக பணிபுரிந்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்தோணிராஜின் தந்தை ஜெபஜான் ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலையத்தில் இடப்பிரச்சினை குறித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். ஆனால் போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த அந்தோணி ராஜ், குடிபோதையில் நேற்று நள்ளிரவு முதல்வர் தனிப்பிரிவுக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அந்தோணிராஜை ஆழ்வார்குறிச்சி போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் தாமரைக் கண்ணன் என்பவர் சென்னை விமான நிலையம் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு ஆகிய முக்கிய இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். செந்தாமரைக்கண்ணன் நெல்லையை அடுத்த சுத்தமல்லியைச் சேர்ந்தவர் ஆவார். இதுபோன்ற மர்ம நபர்கள் குடிபோதையில் போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருவது துரதிருஷ்ட வசமானது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
